Friday, July 18, 2025
Home செய்திகள்Banner News ஆபரேஷன் ‘மிட்நைட் ஹேமர்’ ஈரானில் அமெரிக்கா குண்டு மழை; அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமாகும் – டிரம்ப் எச்சரிக்கை

ஆபரேஷன் ‘மிட்நைட் ஹேமர்’ ஈரானில் அமெரிக்கா குண்டு மழை; அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமாகும் – டிரம்ப் எச்சரிக்கை

by Francis

துபாய்: ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த தாக்குதலுக்காக அமெரிக்கா பேரழிவை சந்திக்கும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் மத்திய கிழக்கில் மட்டுமின்றி உலகளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தன்னிடமுள்ள யுரேனியத்தை அழிவுகரமான அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தாது, மின் உற்பத்தி போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் என அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 6 நாடுகளுடன் கடந்த 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கு பிரதிபலனாக ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விலக்கிக் கொண்டன. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல் முறையாக பதவியேற்ற போது, கடந்த 2018ல் இந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறினார். ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தார்.

இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டத்தை தொடங்கியது. அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டத் தொடங்கியது. இதனால், 2வது முறையாக அமெரிக்க அதிபரான பிறகு டிரம்ப், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானை கட்டாயப்படுத்தினார். இதுதொடர்பாக அமெரிக்கா, ஈரான் இடையே 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்படவில்லை. யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தவில்லை. இதற்கிடையே, ஈரான் 90 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டியதாகவும், அடுத்த ஓரிரு மாதத்தில் அணுகுண்டை தயாரிக்கும் நிலையை எட்டிவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் சமீபத்தில் குற்றம்சாட்டினார்.
இந்த தகவலை அமெரிக்க உளவுத்துறை மறுத்த போதிலும், டிரம்ப் தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார்.
இந்த சூழலில், ஈரான் அணு குண்டு தயாரித்தால் இஸ்ரேலை அழிக்க முயற்சிப்பதோடு உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறும் என குற்றம்சாட்டிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த 13ம் தேதி ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தினார்.

இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய அணுசக்தி மையங்கள் மீது குண்டுமழை பொழிந்தன. இதற்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த சண்டையில் இஸ்ரேல் படைகளுக்கு அமெரிக்கா மறைமுகமாக உதவியது. அதுமட்டுமின்றி, ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும், இது ஈரானுக்கு வழங்கப்பட்ட 2வது வாய்ப்பு என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டினார். ஆனால் ஈரான் யாரிடமும் சரணடையாது என அந்நாட்டின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி காமெனி மறுத்து விட்டார். இஸ்ரேல், ராணுவ பலம் மிக்க நாடு என்றாலும், ஈரானின் உயர்பாதுகாப்பு நிறைந்த அணுசக்தி மையங்களை முழுமையாக தகர்க்கக் கூடிய சக்தி படைத்தது அல்ல. ஈரானில் யுரேனியம் செறிவூட்டும் முக்கிய அணு மையங்களாக நடான்ஸ் மற்றும் போர்டோ உள்ளன.

இதில் நடான்ஸ் அணு சக்தி மையம் மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும் சேதமடைந்த நடான்ஸ் அணு சக்தி மையத்தின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டிருப்பதாக ஈரான் தெரிவித்தது. இதே போல, யுரேனியம் தாதுக்களை யுரேனியம் ஹெக்சாப்ளூரைடு வாயுக்களாக மாற்றம் செய்யக் கூடிய இஸ்பஹான் அணு மையம் மீது இஸ்ரேல் 2 முறை தாக்குதல் நடத்தி பெரும் சேதம் விளைவித்தது. ஆனாலும் மலைக்கு அடியில் பல அடி ஆழத்தில் கட்டப்பட்ட போர்டோ அணு மையத்தை இஸ்ரேலால் நெருங்க முடியவில்லை. இந்த அணுசக்தி மையத்தை தாக்கக் கூடிய ஜிபியு-57 ரக பங்க்கர் பஸ்டர் வெடிகுண்டு உலகிலேயே அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இதனால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இப்போரில் பங்கேற்பது குறித்து 2 வாரத்தில் முடிவு செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 19ம் தேதி கூறியிருந்தார். அதே சமயம், அடுத்த 2 நாளில் அமெரிக்கா களமிறங்கும் என இஸ்ரேல் அதிகாரிகள் கூறியிருந்தனர்.அதே போல, போரின் 10வது நாளான நேற்று அமெரிக்காவும் இணைந்தது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் நடவடிக்கை மூலம் ஈரானில் குண்டுமழை பொழிந்தது.

நேற்று அதிகாலை அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த பி2 ஸ்டெல்த் போர் விமானங்கள் 18 மணி நேரம் பயணித்து ஈரான் வான்பரப்பை அடைந்தன. எந்த ரேடாரிலும் எளிதில் சிக்காத இந்த விமானங்கள் ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பஹான் அணு மையங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்தன. குறிப்பாக, 6 பி2 விமானங்கள், மலைக்கு கீழே 60 மீ குடைந்து சென்று வெடித்து சிதறக் கூடிய 13,600 எடை கொண்ட ஜிபியு-57 குண்டுகளை போர்டோ அணுசக்தி மையத்தின் மீது வீசின. எந்த நாட்டிடமும் இல்லாத இந்த வகை குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியது இதுவே முதல் முறை. மற்றொரு பி2 விமானம் நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்கின. அதே சமயம், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கி கப்பல்கள் 30 தோமாஹாக் ஏவுகணைகளை வீசி நடான்ஸ், இஸ்பஹான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பஹான் ஆகிய 3 அணு சக்தி மையங்கள் மீதான தாக்குதலையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.

தாக்குதலில் ஈடுபட்ட எங்களின் அனைத்து போர் விமானங்களும் ஈரான் வான் பரப்பில் இருந்து வெளியேறி விட்டன.
முக்கிய தாக்குதல் தளமான போர்டோவில் முழுமையான வெடிகுண்டுகளும் வீசப்பட்டுள்ளன. எங்கள் விமானங்கள் பத்திரமாக நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. உலகில் யாராலும் செய்ய முடியாத காரியத்தை இன்று அமெரிக்கா செய்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கு உலகிற்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். ஈரான் கட்டாயம் போரை நிறுத்த ஒப்புக் கொள்ள வேண்டும். இன்னும் நிறைய இலக்குகள் மீதமுள்ளன’’ என்றார். மேலும் இத்தாக்குதல் தொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய டிரம்ப், ‘‘ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இனி ஈரான் அமைதியடைய வேண்டும், இல்லாவிட்டால் பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும். அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் வலுவான பதிலடி தரப்படும்’’ என்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்த வீடியோ அறிக்கையில், ‘‘அமெரிக்கா இன்று செய்த சம்பவத்தை உலகில் வேறெந்த நாடும் செய்ய முடியாதது.

ஈரானின் அணுசக்தி மையங்களை தகர்க்கும் அதிபர் டிரம்பின் தைரியமான இந்த முடிவு ஆகச்சிறந்தது. வரலாற்றை மாற்றி எழுதக் கூடியது. அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கில் மட்டுமல்ல உலகிலும் அமைதி நிலவும், வளம் பெருகும்’’ என டிரம்பை வெகுவாக புகழ்ந்தார். ஈரான் வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘இஸ்ரேல் உதவியுடன் ராணுவ தாக்குதல் நடத்தி அமெரிக்கா மிகப்பெரிய துரோகம் செய்து விட்டது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அபாயகரமான போரை தொடங்கி இருக்கிறது. இதில் அமெரிக்க ராணுவத்திற்கு வலுவான பதிலடி தர ஈரானுக்கு முழுமையான உரிமை உள்ளது. ஈரானின் இறையாண்மை பாதுகாக்கவும், ஈரான் மக்களை பாதுகாக்கவும் பதிலடி தருவோம்’ என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தனது கொராம்ஷார்-4 பாலிஸ்டிக் ஏவுகணை உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பென்குரியன் விமான நிலையம், ராணுவ தளங்கள், ஆராய்ச்சி மையங்கள் குறிவைக்கப்பட்டதாக ஈரான் கூறி உள்ளது.

இந்த தாக்குதலில் டெல் அவிவ், ஹைபா நகரங்களில் 80 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அபாயகரமான விரிவாக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருப்பதாகவும், சர்வதேச சட்டத்தை மீறியிருப்பதாகவும் ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவை கண்டித்துள்ளன. இனி வரும் நாட்களில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், இப்போர் மத்திய கிழக்கில் அபாயகரமான சூழலை ஏற்படுத்தி இருப்பதோடு 3ம் உலகப் போர் வெடிக்கக் கூடிய வாய்ப்பையும் உருவாக்கி உள்ளது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi