புதுடெல்லி: சைபர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் ஆபரேஷன் சக்ரா-2 திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 76 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். சைபர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆபரேஷன் சக்ரா-1 திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் எப்.பி.ஐ., இன்டர்போல் உள்பட பல்வேறு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் நாடு முழுவதும் 115 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்தாண்டு சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்தாண்டும் அதே போன்று, ஆபரேஷன் சக்ரா-2 திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உ.பி., ம.பி., இமாச்சல், அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் உள்பட நாடு முழுவதும் 76 இடங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக சிபிஐ.யினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அமெரிக்காவின் எப்.பி.ஐ., சைபர் குற்ற இயக்குநரகம், இன்டர்போல், தேசிய குற்ற முகமை, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி போலீசாருடன் இணைந்து இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி புலனாய்வு பிரிவு (எப்.ஐ.யூ) வழங்கிய முக்கிய தகவல்களின் அடிப்படையில் ஒரு வழக்கு, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் அளித்த புகாரின் பேரில் அடிப்படையில் 2 வழக்குகள் உள்பட மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலி கிரிப்டோகரன்சி மூலம் சந்தேகப்படாத வகையில் இந்தியர்களை குறிவைத்தது ரூ.100 கோடியை மோசடி செய்ததாக ஒரு வழக்கு உட்பட சைபர் குற்றம் மூலம் நிதி மோசடி செய்ததாக 5 தனித்தனி வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.