துபாய்: அமெரிக்க தாக்குதல் நடத்திய நிலையில் ஆபரேஷன் ‘பஷாரத் அல்-பாத்’ என்ற பெயரில் கத்தார் மற்றும் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை தடுப்பதாக கூறி இஸ்ரேல் கடந்த 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. இப்போரின் 10ம் நாளான நேற்று முன்தினம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக போரில் இணைந்து, ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பஹான் ஆகிய 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது குண்டுமழை பொழிந்து தாக்கியது. குறிப்பாக, மலைக்கு அடியில் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்டோ அணுசக்தி மையமே அமெரிக்காவின் முக்கிய குறி. இந்த மையத்தை தகர்க்க பி-2 பாமர்ஸ் எனும் அதிநவீன போர் விமானங்கள் மூலம் ஜிபியு-57 எனும் 13,600 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை வீசியது. உலகிலேயே இந்த வெடிகுண்டு மட்டுமே பூமிக்கு அடியில் 200 அடி துளையிட்டு பின்னர் வெடித்து சிதறக் கூடியது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலில் போர்டோ உள்ளிட்ட 3 அணுசக்தி மையங்களும் கடுமையாக சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்ற இந்த பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்காக அமெரிக்காவின் மிசோரியில் இருந்து 18 மணி நேரம் பறந்து வந்த பி2 பாமர்ஸ் விமானங்கள் மீண்டும் 18 மணி நேரம் பயணித்து மிசோரி ராணுவ தளத்தை நேற்று வெற்றிகரமாக வந்தடைந்ததாக அமெரிக்க விமானப்படை கூறி உள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடிநேற்று இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபாவை குறி வைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. ஜெருசலேமிலும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்டன. தாக்குதல் தீவிரமானதால் பொதுமக்கள் பதுங்குமிடங்களுக்கு செல்ல இஸ்ரேல் அரசு அறிவுறுத்தி உள்ளது. இஸ்ரேலின் மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. இதே போல, ஈரான் தலைநகர் தெஹ்ரானை சுற்றி உள்ள பகுதிகளில் இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 6 விமானப்படை தளங்கள் மற்றும் எப்-5, எப்-15 போன்ற 15 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. பல ராணுவ தளங்கள், அரசு கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கம், துணை ராணுவ படைகளின் தலைமையக கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஈரானின் முக்கியமான எவின் சிறைச்சாலையும் தாக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறையில் தான் அரசியல் கைதிகள், வெளிநாட்டவர்கள், குறிப்பாக ஈரானுக்கு எதிரான மேற்கத்திய நாட்டினர், ஈரான் சுப்ரீம் லீடர் காமெனியின் உத்தரவின் பேரில் கைதானவர்கள் அடைத்து வைக்கப்படுவது வழக்கம்.
இந்த சிறைச்சாலையின் நுழைவாயில் பகுதியை தகர்த்ததாக இஸ்ரேல் கூறி உள்ளது. இந்த தாக்குதலை ஒப்புக் கொண்டுள்ள ஈரான் நீதித்துறை, சிறைச்சாலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கைதிகள் மத்தியில் எந்த அசம்பாவிதமான சம்பவங்களும் நடக்கவில்லை என கூறி உள்ளது. தலைநகர் தெஹ்ரானில் பல இடங்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து வானுயர புகை மண்டலங்கள் எழுந்துள்ள காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, போர்டோ அணுசக்தி மையம் மீது நேற்றும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலை நடத்தியதை ஒப்புக் கொண்டுள்ள இஸ்ரேல் ராணுவம், போர்டோ அணுசக்தி மையத்திற்கு செல்லும் பாதையை தகர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை 11 நாள் போரில் ஈரானில் 950 பேர் பலியாகி உள்ளனர். இதில் 380 பேர் பொதுமக்கள், 253 பேர் பாதுகாப்பு படையினர். 3,450 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் வாய்ப்பும் மறுப்பதற்கில்லை என அந்நாட்டின் வெளியுறவு விவகார துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே கூறி உள்ளார்.
இந்நிலையில் ‘ஆபரேஷன் பஷாரத் அல்-பாத்’ என்கிற பெயரில் கத்தார் மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக ஈரானின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், கத்தாரின் அல் உதெய்த் விமான தளத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. அதே போல ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப்படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில் இது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.