சென்னை: இஸ்ரேலில் இருந்து ‘‘ஆபரேஷன் அஜய்’’ சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட 5 சிறுவர்கள் உட்பட 23 தமிழர்கள், நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தடைந்தனர். அவர்களை டெல்லி விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதோடு அவர்களுக்கு உணவு இரவு தங்குமிடம் ஏற்பாடுகள் செய்தனர். அதன்பின்பு அவர்களுக்கு நேற்று காலை விமானங்களில், சென்னை, கோவை, மதுரைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விமான டிக்கெட்கள் எடுக்கப்பட்டன. அதில் நேற்று காலை 17 பேர் சென்னைக்கும், 4பேர் கோவைக்கும், 2 பேர் மதுரைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா சார்லஸ், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஆகியோர் வரவேற்றனர்.
கலாநிதி வீராசாமி சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி :இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தீவிரமடைந்த நிலையில், ஒன்றிய அரசு கடந்த 5 நாளாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை, ‘‘ஆபரேஷன் அஜய்’’ திட்டத்தின் தனி விமானம் மூலம் மீட்கப்பட்டு அழைத்து வருகிறார்கள். அதன்படி இஸ்ரேலில் சிக்கியிருந்த 121 தமிழர்கள் தமிழ்நாடு திரும்பியுள்ளனர். மேலும் 26 தமிழர்கள், அவர்கள் சொந்த செலவில் தாமாக தமிழ்நாடு வந்துள்ளனர். மேலும் 11 தமிழர்கள் இஸ்ரேலில் பாதுகாப்பாக இருப்பதாகவும், எனவே தாங்கள் அங்கேயே இருந்து கொள்வதாகவும், தெரிவித்துள்ளனர் என்றார்.