புதுடெல்லி: இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கும், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக துணை ஜனாதிபதி ெஜகதீப் தன்கார் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி ெஜகதீப் தன்கர் பேசியதாவது: பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத தளங்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலானது எல்லை தாண்டிய மிக ஆழமான தாக்குதலாகும். கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களை திட்டமிட்டு மேற்பார்வையிட்டு, செயல்படுத்திய ஒரு உலகளாவிய தீவிரவாதியை(ஒசாமா பின்லேடன்) அமெரிக்க படைகள் இதேபோல் சமாளித்தன.
இந்தியாவும் இதனை செய்துள்ளது. முதல் முறையாக ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பாவின் கோட்டைகளில் சர்வதேச எல்லையைத் தாண்டி ஆழமான துல்லியமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல்கள் மிகவும் துல்லியமாக இருந்ததால் தீவிரவாதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்கு பின் பிரதமர் மோடி உலக சமூகத்திற்கு பீகாரில் இருந்து ஒரு செய்தியை வழங்கினார். அவை வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை உலகம் இப்போது உணர்ந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் நாடுகளின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் இந்திய மக்கள் ஈடுபடக் கூடாது’’ என்றார்.