புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை குறிவைப்பது குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த விஷயம் தொடர்பாக ஒன்றிய அரசு மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். கடந்த ஏப்ரல் 22 ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் தீவிரவாதிகளின் பல முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு தெரிவித்ததற்காக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், ‘‘ராணுவ தாக்குதல் பற்றி பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தது குற்றம். இதற்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த தாக்குதலின் போது இந்திய விமான படைக்கு எத்தனை விமானங்கள் இழப்பு ஏற்பட்டது’’ என கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய வீடியோ ஒன்றையும் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘‘தாக்குதலை தொடங்குவதற்கு முன் பாகிஸ்தானுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது. அதில், தீவிரவாத கட்டமைப்புகளை தாக்குவோம். பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். அதன் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தலையீடு செய்யாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த நல்ல அறிவுரையை அந்த நாடு ஏற்கவில்லை’’ என்று அவர் பேசுவதை கேட்க முடிகிறது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்தார் என்று வெளியான செய்தியை பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) மறுத்துள்ளது. பிஐபியின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், அமைச்சர் ஜெய்சங்கர் அதுபோன்ற எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும், அவர் தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாகவும் கூறியுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாக உள்ளனர்
ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தனது எக்ஸ் பதிவில், ‘‘பஹல்காம் தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகவே உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறிய போதிலும் அவர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவும் இல்லை. பஹல்காம் தாக்குதல் பாதுகாப்பு குறைபாட்டின் விளைவாகும் என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டாலும், யாரும் பொறுப்பேற்கவில்லை, தவறுக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை’’ என்றார்.