குருகிராம்: இன்ஸ்டாகிராமில் வகுப்புவாத கருத்துக்களுடன் கூடிய வீடியோவை பதிவிட்ட பெண் இன்ஸ்டாகிராம் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஜூன் 13 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் மற்றும் புனே சட்ட பல்கலைக்கழக மாணவி ஷர்மிஸ்டா பனோலி. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆனந்தபூர் பகுதியில் வசிப்பவர்.
இவர் பாலிவுட் நடிகர்கள், ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமைதியாக இருப்பதாக கூறி வகுப்புவாத கருத்துக்களுடன் கூடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை டிரோல் செய்து சிலர் அச்சுறுத்தும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். எதிர்ப்பு காரணமாக ஷர்மிஸ்டா வீடியோவை நீக்கி மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இதற்குள் கொல்கத்தா காவல்நிலையத்தில் அவருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக அவருக்கும், குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் குடும்பத்துடன் தப்பிச்சென்ற நிலையில் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. நேற்று முன்தினம் குருகிராமில் வைத்து கொல்கத்தா போலீசார் ஷர்மிஸ்தாவை கைது செய்தனர். கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஜூன் 13ம் தேதி வரை காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* சர்மிஷ்டாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 90.2 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.
* மே 15 அன்று தனது பதிவு குறித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
* என்ன வழக்குகள்?
ஷர்மிஷ்டா பனோலி மீது பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கில் தீங்கிழைக்கும் செயல்கள், வேண்டுமென்றே அவமதிப்பு தவிர, அமைதியை மீறுவதைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* எல்லாம் கட்டுக்கதை வக்கீல் சொல்கிறார்
சர்மிஷ்டா பனோலியின் வழக்கறிஞர் எம்.டி. சமிமுதீன் கூறுகையில்,’ சர்மிஷ்டாவுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் குற்றம் செய்ததாக கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் கட்டுக்கதைகள். மொபைல் போன் மற்றும் மடிக்கணினி ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதைக் காரணம் காட்டி, எங்கள் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் எங்கள் தரப்பு கருத்தை கேட்டது. போலீஸ் காவல் மனுவை அரசு தரப்பு கோரியது, எனவே எங்கள் மனு நிராகரிக்கப்பட்டது’ என்றார்.
* நிபந்தனையற்ற மன்னிப்பு
சர்மிஷ்டா கடைசியாக மே 15 அன்று பதிவிட்ட தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,’நான் இதன் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன். என்ன எழுதப்பட்டதோ அது எனது தனிப்பட்ட உணர்வுகள். நான் வேண்டுமென்றே யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை, எனவே யாராவது காயமடைந்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். ஒத்துழைப்பையும் புரிதலையும் எதிர்பார்க்கிறேன். இனிமேல், எனது பொது இடுகையில் நான் எச்சரிக்கையாக இருப்பேன். மீண்டும் எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.