புதுடெல்லி:பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் 2ம் கட்ட பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மே 7 அன்று நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா- பாக்., இடையே போர் நிறுத்தம் அமலான நிலையில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர், பஞ்சாப் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில், நேற்று 2ம் கட்ட பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நடக்கும்போது, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என பயிற்சி அளிப்பதற்காக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த பயிற்சி மாலை 5 மணிக்குத் தொடங்கி பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. ஜம்முவில், இரவு 8 மணி முதல் இரவு 8.15 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டது. சண்டிகரில், கிஷன்கர் மற்றும் ஐடி பார்க் பகுதிகளில் இரவு 8 மணி முதல் இரவு 8.10 மணி வரை 10 நிமிட மின்தடை மேற்கொள்ளப்பட்டது.