Sunday, June 15, 2025
Home செய்திகள்Showinpage ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் விளக்க 7 குழுக்களை அமைத்தது ஒன்றிய அரசு: கனிமொழி, சசிதரூருக்கு தலைமை பொறுப்பு வழங்கல்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் விளக்க 7 குழுக்களை அமைத்தது ஒன்றிய அரசு: கனிமொழி, சசிதரூருக்கு தலைமை பொறுப்பு வழங்கல்

by Neethimaan

புதுடெல்லி: பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளிடம் விளக்கம் அளிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இதில் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கான திமுகவின் கனிமொழி, காங்கிரசின் சசிதரூர் மற்றும் தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே ஆகியோருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி இந்தியாவின் முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பதிலுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஏவிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தகர்த்தன. 4 நாள் சண்டைக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், துளி அளவும் தீவிரவாதத்தை பொறுத்துக் கொள்ளாத இந்தியாவின் செயல்பாடு குறித்தும் உலக நாடுகளுக்கு விளக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கொண்ட 7 குழுக்களை ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. இக்குழுவினர் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நட்பு நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியாவின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
இக்குழுவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 7 பேரும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து 3 பேரும் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் தரப்பில் இருந்து ரவிசங்கர் பிரசாத் (பாஜ), சஞ்சய் குமார் ஜா (ஐக்கிய ஜனதா தளம்), பைஜயந்த் பாண்டா (பாஜ), காந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகியோரும் இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவின் கனிமொழி, காங்கிரசின் சசிதரூர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே ஆகியோரும் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 7 குழுவிலும் உறுப்பினர்களாக அனுராக் தாக்கூர், அபராஜிதா சாரங்கி, மணிஷ் திவாரி, அசாதுதீன் ஓவைசி, அமர் சிங், ராஜிவ் பிரதாப் ரூடி, சமிக் பட்டார்ச்சார்யா, பிரிஜ் லால், சர்பிராஷ் அகமது, பிரியங்கா சதுர்வேதி, விக்ரம்ஜித் சாவ்னே, சஸ்மித் பத்ரா, பூபேஷ்வர் கலிதா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித்தும் இடம் பெற்றுள்ளார். தற்போது இவர் எம்பி இல்லை என்றாலும், அவரது அனுபவத்தின் அடிப்படையில் சஞ்சய் ஜா குழுவில் இடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு குழுவிலும் 6 அல்லது 7 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 4 முதல் 5 நாடுகள் வரையிலும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 22 அல்லது 23ம் தேதி முதல் இக்குழுவின் பயணஙகள் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு குழுவும் 10 நாட்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க உள்ளனர். இது குறித்து, நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் தேசிய ஒருமித்த கருத்தையும் உறுதியான அணுகுமுறையையும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் முன்வைக்கும். தீவிரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை அவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்வார்கள். அரசியல் பிளவுகளைக் கடந்து அனைத்து கட்சிகளிலிருந்தும்,

வெளிப்படையான குரல்களாகக் கருதப்படும் பிரதிநிதிகளையும் அவர்களை வழிநடத்தும் தலைவர்களையும் அரசு கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பதிவில், ‘‘மிக முக்கியமான தருணத்தில் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது. தீவிரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நமது கொள்கையை எடுத்துச் செல்லும் வகையில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்கள் விரைவில் முக்கிய நட்பு நாடுகளுக்குச் செல்ல உள்ளனர். இக்குழுக்கள், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு’’ என்றார்.

எந்த நாடுகளுக்கு பயணம்?
ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அல்ஜீரியாவுக்குச் செல்கிறது. சுப்ரியா சுலே தலைமையிலான குழு ஓமன், கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் செல்கிறது. சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவுக்குச் செல்கிறது. இதுதவிர மற்ற குழுக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

சசிதரூர் நன்றி
சசிதரூர் தனது எக்ஸ் பதிவில், ‘‘அனைத்து கட்சி குழுவின் தலைமைப் பொறுப்பை வழங்கியதன் மூலம் கவுரப்படுத்தப்பட்டுள்ளேன். தேசிய நலன் சார்ந்த விஷயத்தில், எனது சேவைகள் தேவைப்படும்போது, கண்டிப்பாக அதை சிறப்பாக செய்வேன். ஜெய்ஹிந்த்’’ என கூறி உள்ளார். சமீபகாலமாக சசிதரூர் பாஜ அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், அவரது தேர்வு சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பரிந்துரைத்தவர்களை புறக்கணித்தது ஏன்?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை வகிக்கும் எம்பிக்களின் பெயர்களை பரிந்துரைக்க ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் ஆலோசித்து கட்சி சார்பில் ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், சையத் நசீர் உசேன், அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் ஆகியோரை பரிந்துரைத்தோம். ஆனால் கட்சி சார்பில் அனுப்பிய பட்டியலில் இல்லாதவர்கள் குழு தலைமைக்கும், உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் முன்கூட்டியே பெயர்களை முடிவு செய்து விட்டு, சம்பிரதாயத்திற்காக கட்சியிடம் பெயர்களை ஒன்றிய பாஜ அரசு கேட்டுள்ளது. இது நேர்மையற்ற செயல், முற்றிலும் குறும்புத்தனமானது. ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி ராகுல் காந்தி, கார்கே எழுதிய கடிதங்களுக்கு பிரதமர் மோடி எந்த பதிலும் அனுப்பவில்லை. அனைத்து கட்சி கூட்டங்களுக்கு வராதவர், சிறப்பு அமர்வை அழைக்காதவர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்களுக்கு மவுனத்தை கலைக்காதவர், அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் அரசியல் செய்கிறார்’’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மனிதகுலத்திற்கு பாக். அச்சுறுத்தல்
ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் ஆதரித்த தீவிரவாதத்தால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நாடாக இருந்து வருகிறது. தீவிரவாதத்தை ஆதரிப்பதில் நீண்ட வரலாற்றை கொண்ட பாகிஸ்தான் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இந்த செய்தியை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லும் குழுவின் நானும் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். இந்தியா உடனான மோதலில் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக சித்தரித்துக் கொள்வதற்காக பாகிஸ்தானை கண்டிக்க வேண்டியது அவசியம். இது முட்டாள்தனம். இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதையும் உலக நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

திரிணாமுல் எம்பி விலகல்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதிப் பந்த்யோபாத்யாய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்கா செல்லும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் இடம் பெறுமாறு நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், உடல் நிலை காரணமாக என்னால் செல்ல முடியாது என மறுத்துவிட்டேன்’’ என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi