Wednesday, July 16, 2025
Home செய்திகள் ஆபரேஷன் ரைசிங் லயன் ஈரானை அடித்து துவைக்கும் இஸ்ரேல்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏன்? ஈரானின் ஏவுகணைகள் 3,000 தாக்கும் தூரம் 300-2,000 கி.மீ ஏவு தளங்கள் 7

ஆபரேஷன் ரைசிங் லயன் ஈரானை அடித்து துவைக்கும் இஸ்ரேல்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏன்? ஈரானின் ஏவுகணைகள் 3,000 தாக்கும் தூரம் 300-2,000 கி.மீ ஏவு தளங்கள் 7

by Ranjith

ஈரானின் அணுசக்தி மையம், ராணுவத் தளங்கள் மீது ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால், இந்த தாக்குதல் பற்றி ஒரு வாரத்துக்கு முன்பே அமெரிக்காவுக்கு தெரிந்துவிட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தனது பணியாளர்களை அமெரிக்கா திரும்ப அழைத்த போதே, மேற்கத்திய ஊடகங்களுக்கு மூக்கு வேர்த்துவிட்டது. எந்த நேரத்திலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று செய்திகளும் வெளியாகின. அந்த செய்தி இன்றைக்கு நிஜமாகி இருக்கிறது.

ஈரானில் உள்ள ஏவுகணை உற்பத்தி தளம், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடந்தி உள்ளது. இதில் ஈரான் ராணுவ தலைமை தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார். ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மீது நூற்றுக்கும் அதிகமான டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த அதை நடுவானிலேயே இஸ்ரேல் அழித்து விட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மோதல் அணு ஆயுத போராக மாறும் அபாயம் உள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அப்படி என்னதான் மோதல்? இஸ்ரேலுடன் ஈரான் நேரடியாக மோதுவது கிடையாது. ஆனால், இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுக்கும் காசாவின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதிகள் போன்ற அமைப்புகள் ஈரானின் நண்பர்கள். அந்த அமைப்புகளுக்கு உதவி செய்து, இஸ்ரேலுக்கு எதிராக கொம்பு சீவிவிடுவதில் ஈரானின் பங்கு முக்கியமானது.

இந்த அமைப்பினரை எதிர்த்து போரிடுவதே இஸ்ரேலுக்கு பெரிய வேலையாகி விட்டது. காசாவில் ஹமாசை பெரும் போராட்டத்துக்கு பிறகு ஒடுக்கியாகிவிட்டது. லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கு கடிவாளம் போட்டாகி விட்டது. ஏமனின் ஹவுதிகளுடன் அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. இந்த அமைப்புகள் இன்றும் உயிர்ப்போடு இருப்பதற்கு முக்கிய காரணமே ஈரான் அவர்களுக்கு செய்யும் உதவிதான்.

ஈரானின் இன்றைய நிலைக்கு காரணம் என்ன? வரலாற்று பக்கங்களை சற்றே புரட்டி பார்த்ததில் கிடைத்த விடை இதோ… முந்தைய காலத்தில் பாரசீகம் என்று அழைக்கப்பட்ட பகுதிதான் இன்றைய ஈரான். இந்த நாட்டின் கச்சா எண்ணெய் வளங்களுக்காக வல்லரசுகள் முட்டி மோதியுள்ளன. 1941ல் ஆங்கிலேய படைகளும், சோவியத் ராணுவமும் ஈரானை ஆக்கிரமித்தன. இதனால், அப்போதிருந்த மன்னர் பஹலவி ஷா தனது அரியணையை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது மகன் முகமது ரேசா ஷா பஹலவியை மன்னராக அறிவித்துவிட்டு நாட்டைவிட்டு சென்றுவிட்டார்.

புதிய ஷா பொறுப்பேற்றதும் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட மன்னராக இருப்பேன் என்று பிரகடனம் செய்தார். ஆனால், அரசு நிர்வாகத்தில் அடிக்கடி தலையை நுழைத்தார். 1949ல் மன்னரை கொல்ல சதி நடக்க, இதுதான் சாக்கு என்று அதிகாரங்களை தன்னிடம் குவித்துக் கொண்டார். அதே நேரத்தில் ஈரான் மக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்றிருந்த முகமது மொசாடெக்கிற்கும் ஷாவுக்கும் ஏழாம் பொருத்தம். மன்னர் ஷாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்துடன் நெருக்கம் அதிகம்.

பார்த்தார் முகமது மொசாடெக் ஈரானின் எண்ணெய் வளங்களை சுரண்டி வந்த இங்கிலாந்து நாட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கும் தீர்மானத்தை ஈரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றச் செய்தார். இதற்கு மன்னர் ஷா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 1951ல் வேறு வழியில்லாமல் முகமது ெமாசாடெக்கையே பிரதமராக்கும் நிலை மன்னருக்கு ஏற்பட்டது. ஆனால், பிரதமரை எப்போது காலி செய்யலாம் என்று காத்திருந்த மன்னர், 1953ல் மொசாடெக்கை டிஸ்மிஸ் செய்ய முயற்சித்தார். ஈரான் மக்கள் கொதித்தெழுந்தனர்.

விளைவு, உயிருக்கு பயந்து மன்னர் ஷா வேறு நாட்டில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது. ஆனால் இது சில நாட்களுக்குதான், அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு உளவாளிகள் உதவியோடு மீண்டும் நாடு திரும்பிய மன்னர் ஷா, பிரதமரை டிஸ்மிஸ் செய்ததோடு, ஈரானின் ஒரே தலைவரானார். அமெரிக்காவுக்கு ரொம்பவே நெருக்கமாகிவிட்டார். 1963ல் மன்னர் ஷா அறிமுகப்படுத்திய வெண்மை புரட்சி ஈரானில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

நில சீர்திருத்தம், அடிப்படை கட்டமைப்பு, பெண்களுக்கு வாக்குரிமை, எழுத்தறிவு என்று அவர் அறிவித்த புரட்சிகர திட்டங்களுக்கு ஈரான் மக்களிடையே ஆதரவு பெருகியது. ஆனால், இது இஸ்லாமிய மதவாதிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தியது. மேற்கத்திய கலாச்சாரத்தை ஈரானில் புகுத்த மன்னர் முயற்சிக்கிறார் என்று எதிர்ப்பு குரல் எழுப்ப துவங்கினர். அவர்களில் ஒருவர்தான் இஸ்லாமிய மத தலைவர் அயதுல்லா ரூகொல்லா கொமெனி. மன்னர் ஷாவை பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, இஸ்லாமிய நாடாக ஈரானை அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

பார்த்தார் மன்னர், கொமெனியை விட்டுவைத்தால் ஆபத்து என்று நாடு கடத்தும் உத்தரவை 1964ல் பிறப்பித்தார். அண்டை நாடான ஈராக்கில் தஞ்சம் புகுந்த கொமெனி அங்கிருந்தபடியே ரேடியோ மூலம் ஈரான் மக்களை மன்னருக்கு எதிராக தூண்டிவிட ஆரம்பித்தார். தன்னை பாரசீக மன்னர் வம்சத்தின் மாமன்னர் என்று நினைத்து கொண்ட மன்னர் ஷா, பாரசீக மன்னராட்சியின் 2500வது ஆண்டு விழாவை கொண்டாடினார். 1976ல் அது வரை இஸ்லாமிய காலண்டரை பின்பற்றிவந்த ஈரானில் இனி பாரசீக காலண்டர் தான் என்று மன்னர் வெளியிட்ட அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியது.

தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் தனது ரகசிய போலீஸ் படையை பயன்படுத்தி நசுக்கினார் மன்னர். இது மாணவர்கள், கற்றறிந்தவர்கள் உள்ளிட்டோர் கொமெனி பக்கம் சாய காரணமாக அமைந்தது. இதற்கிடையே, வெண்மை புரட்சியால் ஆட்சியாளர்களுக்கு மட்டுமே லாபம், எங்களுக்கு ஒன்றுமில்லை என்று ஏழை, நடுத்தர மக்கள் பொருமிக்கொண்டிருந்தனர். விளைவு 1978ல் மன்னர் ஷாவுக்கு எதிராக ஈரானின் முக்கிய நகரங்களில் மக்கள் தெருவில் இறங்கி போராடினர்.

பதிலுக்கு ஷாவின் போலீஸ் குருவி சுடுவதுபோல் மக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. அந்த ஆண்டு நவம்பரில், தலைநகர் தெஹ்ரான் வீதிகள் போர்க்களமாக மாறியது. மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளமாக கருதப்பட்ட வங்கிகள், மதுபான கடைகளை மக்கள் சூறையாடினர். இதுவரை மக்களை பின்னால் இருந்து தூண்டிவந்த மதத்தலைவர் கொமெனி கோதாவில் நேரடியாக களமிறங்கினார்.

மன்னர் ஷாவை பதவியில் இருந்து தூக்கியெறிய வேண்டும் என்று குரல் கொடுக்க, 1978 டிசம்பர் 11ம் தேதி ராணுவத்தினரில் ஒரு பிரிவினர் மன்னருக்கு எதிராக புரட்சி செய்தனர். மன்னரின் பாதுகாவலர்களை அவர்கள் தாக்க, மன்னர் ஷாவின் ஆட்டம் குளோஸ். மன்னர், குடும்பத்தோடு 1978 டிசம்பரில் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். பிப்ரவரி 1, 1979 அன்று, அயத்துல்லா ரூகொல்லா கொமெனி ஈரானுக்கு திரும்பினார்.

ஈரானில் தேர்தலும் நடந்தது. இதில் ஈரானை இஸ்லாமிய குடியரசு நாடாக மாற்ற மக்கள் அமோக ஆதரவு தெரிவித்திருந்தனர். ஈரானின் அரசியல், மத உச்ச தலைவராக கொமெனி நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் இஸ்லாமிய மத சட்டம் அமலுக்கு வந்தது. மதத்தின் பெயரால் ஆளப்படும் நாடுகளில் ஒன்றாக ஈரானும் மாறியது. அதுவரை மேற்கத்திய உடை உடுத்தி வந்த ஈரான் பெண்கள் புர்கா அணிவது கட்டாயமானது. மதுபானங்களுக்கு தடை, மேற்கத்திய இசை கேட்கவே தடை வந்தது. இஸ்லாமிய சட்டப்படி தண்டனைகள் அமல்படுத்தப்பட்டன.

மன்னர் ஷா ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். எதிர்ப்பு குரல் உடனடியாக அடக்கப்பட்டது. எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அவர், ஷியா பிரிவு முஸ்லிம் நாடுகளுடன் நெருக்கம் காட்டினார். இதற்கிடையே 1979 அக்டோபரில் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார் முன்னாள் மன்னர் ஷா. அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கொமெனி விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.

விளைவு அமெரிக்காவுக்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிட்டார் கொமெனி. 1979 நவம்பர் 8ம் தேதி தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய மாணவர்கள் அங்கிருந்த அமெரிக்கர்கள் 52 பேரை 44 நாட்களுக்கு சிறைபிடித்தனர். இது கொமெனி தலைமையிலான ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவை கசந்து போக செய்தது. அன்று ஏற்பட்ட மோதல் இன்று வரை தொடர்கிறது.

1980 செப்டம்பரில் ஈரான் மீது ஈராக் போர்தொடுத்தது. எட்டரை ஆண்டுகள் நீடித்த இந்த போரில் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சாத்தானின் கவிதைகள் நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கொல்ல முஸ்லிம்களுக்கு பட்வா ஆணை பிறப்பித்து உலகெங்கும் தலைப்பு செய்தியில் இடம் பிடித்த கொமெனி 1989 ஜூனில் காலமானார். இதையடுத்து ஈரானின் உச்ச தலைவர் பதவிக்கு வந்தவர்தான் அயதுல்லா காமெனி. இன்றுவரை அந்த பதவியில் இருந்து வருகிறார்.

ஈரான் நாட்டு நிர்வாகம், நீதித்துறை, ராணுவம், செய்தித்தொடர்பு, ஊடகம் மற்றும் நாடாளுமன்றத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர். ஈரானை பொறுத்தவரை அயதுல்லா காமெனி சொல்வதுதான் சட்டம். வெளியுறவு, வர்த்தகம் உள்ளிட்ட நாட்டின் எல்லா விவகாரத்திலும் இறுதி முடிவு இன்றுவரை அவர் கையில்தான் உள்ளது. அதிபர், அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவது அவரது வாடிக்கை.

இப்படித்தான் தேர்தலில் அதிபரை தேர்வு செய்தாலும், அதிலும் ஈரானில் தில்லுமுல்லு நடப்பதாக புகார்கள் எழுந்தது. இவரது கைப்பாவையாக உள்ள ஒருவர்தான் அடுத்தடுத்து தேர்தல்களில் அதிபரானார். தில்லுமுல்லு புகார்கள் எழுந்தாலும் காமெனி நிர்வாகம் அதை புறந்தள்ளிவிடும். எதிர்ப்பாளர்கள் நசுக்கப்படுவார்கள். ஒரு தேர்தலில் 7 ஆயிரம் வேட்பாளர்களை காமெனியே தகுதியிழப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கத் துவங்கினார் காமெனி. இஸ்ரேலை அழிப்பதுதான் ஈரானின் நோக்கம். இதற்காக, ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதிகள் போன்ற ஆயுதம் ஏந்திய தீவிரவாத குழுக்களுக்கு ஈரான் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. அத்தோடு இஸ்ரேலை தாக்க தூண்டி வருகிறது. அண்மை காலம் வரை மறைமுக போரில் ஈடுபட்ட வந்த இரு நாடுகளும் இப்போது நேரடி மோதலில் இறங்கி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இப்போது, இஸ்ரேல் ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்த துவங்கி உள்ளது.

பதிலுக்கு ஈரான் டிரோன் தாக்குதல் நடத்த, இது முழு அளவிலான போராக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது. போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் எழுந்துள்ளது. இந்த மோதலில் இஸ்ரேலின் கை தற்போது ஓங்கி உள்ளது. ஆனால், அணு ஆயுதங்கள் வைத்துள்ளது ஈரான். அதை பயன்படுத்த துவங்கினால் விளைவு பேரழிவாக இருக்கும். மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஈரான் வைத்துள்ளது. அதை பயன்படுத்தி அணு ஆயுதங்களை ஏவினால் இஸ்ரேலுடன் நட்பில் உள்ள மேற்கத்திய நாடுகளுக்கு ஆபத்துதான்.

* 31 ஆண்டுகால நட்பு முறிந்தது எப்படி?
இஸ்ரேல் தனி நாடாக கடந்த 1948ல் உருவானது. பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் அதை அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். ஆனால், ஷியா முஸ்லிம் நாடான ஈரான் இஸ்ரேலை அங்கீகரித்தது. இது இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தியது. மன்னர் ஷா காலத்தில் இஸ்ரேல்-ஈரான் உறவு பலப்பட்டது. இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பும், ஈரானின் சாவாக் உளவு அமைப்பும் ஒரு கட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டன.

இஸ்ரேல் ஈரானுக்கு ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை விற்று வந்தது. பதிலுக்கு இஸ்ரேலுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்தது ஈரான். 1979ல் ஈரான் முஸ்லிம் நாடாக மாறிய பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முறிந்தது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி இஸ்ரேலை மேற்கத்திய நாடுகளின் கருவியாக பார்த்தார். அவர், இஸ்ரேலை அழிக்க சபதமேற்றது, இன்றைக்கு போரில் முடிந்திருக்கிறது.

* அணு ஒப்பந்தமும் டிரம்ப் தடையும்
2013தேர்தலில் அதிபரான ஹசன் ரவுகானி அமெரிக்காவுடனான உரசலை சரி செய்ய முயற்சி செய்யத் துவங்கினார். அணு ஆயுத ஆராய்ச்சியை நிறுத்தினால், ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்படும் என்று மேற்கத்திய நாடுகள் உறுதியளிக்க 2015ல் ஒருவழியாக அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து மேற்கத்திய நாடுகளின் தடை நீங்கியது. ஆனால், அமெரிக்காவில் டிரம்ப் அதிபரானதும் 2018 மே மாதம் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக கூறி மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தார். ஈரான் ஒப்பந்தத்தை மீறி அணு ஆயுதம் தயாரிப்பதாக டிரம்ப் அப்போது குற்றம் சாட்டினார்.

* ஈரானும் சர்வதேச பொருளாதார தடைகளும்
ஈரானுக்கு பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது 1979-ல் துவங்கியது. தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் புகுந்து அங்கிருந்த அமெரிக்கர்களை மாணவர்கள் சிறை பிடிக்க முதன்முதலாக பொருளாதார தடையை சந்தித்தது ஈரான் . இந்தத் தடை 1981 ஜனவரியில் நீக்கப்பட்டாலும் ஈரான் தீவிரவாதிகளை ஆதரிப்பதாக கூறி 1987ல் மீண்டும் தடை விதித்தது அமெரிக்கா.

அடுத்ததாக 2000ம் ஆண்டு தொடக்கங்களில் அணு ஆயுத தயாரிப்புக்கான நடவடிக்கைகளில் ஈரான் இறங்கியது. ஈரானின் அணு செறிவூட்டல் திட்டங்களை நிறுத்த ஐநா முயற்சித்தது. ஆனால் ஈரான் பணியாததால் 2006ல் பொருளாதாரத் தடை விதித்தது ஐநா. இந்தத் தடை 2016 ல் தான் நீக்கப்பட்டது.இது போதாது என்று இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தனித்தனியே தடைகளை விதித்தது. ஆனால் 2018 மே மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பொருளாதார தடைகளை விதித்து ஈரானின் பொருளாதாரத்தை முடக்கினார்.

* வெளிநாடு செல்லாத தலைவர்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதில்லை. வெளிநாட்டு தலைவர்கள் யாராவது அவரை சந்திக்க விரும்பினால், அவர்கள் ஈரான் வந்தால்தான் பார்க்க முடியும். முன்பு 1981 முதல் 1989 வரை அதிபராக இருந்தபோது ஒரு முறை லிபியாவுக்கு மட்டும் காமெனி சென்றுள்ளார்.

* டெலிவிஷன் நேரலையில் அரசு கம்பெனிகள் தனியார்மயம்
2007ம் ஆண்டு அதிபர் மற்றும் அமைச்சர்களுடன் அயதுல்லா காமெனி ஆலோசனை நடத்தினார். இது தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, அரசு தொலைபேசி, 3 வங்கிகள் மற்றும் எராளமான எண்ணெய் நிறுவனங்களை உடனே விற்றுவிடுங்கள் என்று உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi