ஊட்டி: நீலகிரி மாவட்டம் வழியாக கடந்த 12ம் தேதி வயநாடு சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த, முழுவதும் பெண்களை கொண்டு இயங்கும் ேஹாம் மேட் சாக்லெட் பேக்டரிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் சாக்லெட் உற்பத்தி செய்யும் முறை குறித்து ஊழியர்களிடம் ஆர்வமாக கேட்டறிந்தார். அவரும் சாக்லெட் செய்து பார்த்தார். சாக்லெட் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் கலந்துரையாடினார். சாக்லெட்டுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது? என கேட்டறிந்தார். அப்போது மதிப்பு கூட்டப்பட்டு விற்பனைக்கு வரும் ஹோம் மேட் சாக்லெட் உற்பத்தி பொருட்களுக்கு அதிகபட்சமாக 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இதனை கேட்ட அவர், ‘‘ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் பெரும் பிரச்னையாக உள்ளது. சிறு மற்றும் குறு தொழில்களை பாதிக்கிறது’’ என வேதனை தெரிவித்தார். பின்னர், சாக்லெட் உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு என்ன மாதிரியான உதவிகள் எதிர்பார்க்கிறீர்கள்? என கேட்டார். அதற்கு, ‘‘சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கக்கூடிய ஊட்டி நகருக்குள் ஒருங்கிணைந்த சாக்லெட் உற்பத்தி மற்றும் விற்பனை மையம் இல்லை. அதை போன்றதொரு மையம் எங்கள் பகுதிக்கு இருந்தால் நன்றாக இருக்கும்’’ என சாக்லெட் பேக்டரி உரிமையாளர் தெரிவித்தார். அதுகுறித்த கோரிக்கை அடங்கிய மனுவை தருமாறும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்தார்.இது குறித்த வீடியோவை ராகுல்காந்தி தனது டிவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.