ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியை மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த மலர் கண்காட்சி 3 அல்லது 5 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை முதன்முறையாக கடந்த 10ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை 11 நாட்கள் நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழா நேற்று ஊட்டியில் நடந்தது.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பேசிய கலெக்டர் அருணா, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையாமல் உள்ளதால் மேலும் 6 நாட்களுக்கு மலர் கண்காட்சி நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே, இந்த மலர் கண்காட்சி வரும் 26ம் தேதி வரை ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு மலர் அலங்காரங்களை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து ரசித்து செல்லலாம்.