நீலகிரி: உதகை அருகே கல்லக்கொரை கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை நாயை நொடி பொழுதில் வேட்டையாடி சென்றது அக்கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 67% சதவீதம் வனப்பகுதிகள் இருப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சிறுத்தைகளின் எண்ணிக்கை ஆண்டிற்காண்டு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இரவு நேரங்களில் குடியிருப்புப்பகுதிகளுக்குள் வந்து உணவிற்காக அங்குள்ள வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் புகுந்த சிறுத்தை, மொட்டைமாடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை நொடி பொழுதில் வேட்டையாடி சென்றது. பகல் நேரங்களில் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று ஓய்வெடுத்துவிட்டு இரவு நேரங்களில் குடியிருப்புப்பகுதிகளுக்குள் நுழைந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன.
கல்லக்கொரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் மையப்பகுதியில் உள்ள வீட்டில் புகுந்து நாயை வேட்டையாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.