ஊட்டி: ஊட்டியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கடும் குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 25ம் தேதி துவங்கிய பருவமழை ஒரு வார காலம் நீடித்தது. . மழையுடன் சூறாவளி காற்று வீசியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை சற்று ஓய்ந்த நிலையில், மீண்டும் இம்மாத துவக்கத்தில் சில நாட்கள் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மழை குறைந்து காணப்பட்டது.
இதனால், பொதுமக்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பினர். சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் மழை பெய்ய துவங்கியது. ஆனால் மழை தீவிரமடையவில்லை. காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இன்று காலை மழை குறைந்த போதிலும், பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், கடும் குளிர் நிலவுகிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் காய்கறி, தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.