ஊட்டி: ஊட்டி- குன்னூர் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை பர்லியார் வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர்- மேட்டுபாளையம் சாலையில் பர்லியார் பகுதியில் நடமாடி வந்த ஒற்றை தந்தம் கொண்ட இளம் காட்டு யானை காட்டேரி, கிளண்டேல், பழத்தோட்டம் பகுதிகளில் இடம்பெயர்ந்து தேயிலை தோட்டங்களில் நடமாடி வந்தது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள் படுத்து உறங்கியது.
குன்னூரை சேர்ந்த ஒருவர், டிரோன் கேமராவை பயன்படுத்தி யானையின் முகம் அருகே பறக்கவிட்டு வீடியோ எடுத்துள்ளார். வாகன ஒலி, வனத்திற்குள் விரட்டுவதற்காக அதிக சத்தத்துடன் எழுப்பப்படும் ஒலி, பட்டாசு சத்தம் ஆகியவற்றால் அழுத்ததிற்கு உள்ளான யானை, டிரோன் கேமரா மிகவும் அருகில் பறந்ததால், அச்சத்துடன் வழித்தவறி கடந்த 5ம் தேதி சுமார் 30 கிமீ., தூரம் பயணித்து ஊட்டி அருகே தொட்டபெட்டா பகுதியில் முகாமிட்டது. இதையடுத்து யானையை மீண்டும் பர்லியார் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது.
இந்நிலையில் பட்டர் கம்பை பகுதியில் நடமாடிய ஒற்றை யானை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கடந்த 9ம் தேதியன்று அப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த யானை மைனலை பகுதிக்கு சென்றது. பின் ஊட்டி- குன்னூர் சாலையை கடந்து மந்தாடா, கேத்தி பகுதிகளில் நடமாடியது. இச்சூழலில் ஒற்றை தந்த யானை மீண்டும் ஊட்டி நகரை நோக்கி வர துவங்கியுள்ளது. நேற்றிரவு ஊட்டி-குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் சாலையோரம் முகாமிட்டது.
வாகனங்கள் சென்று வந்த நிலையில் சாலையோரம் இருந்த கடை வாசலில் நின்று அங்குள்ள குப்பை தொட்டியில் உணவுகளை தேடியது. வேலிவியூ பகுதியில் இருந்து ஊட்டி நகருக்கு வர 1 கிமீ தூரமே உள்ள நிலையில் ஒற்றை தந்த யானை மீண்டும் ஊட்டி நகருக்குள் வர கூடிய சூழல் உள்ளது. எனவே இந்த யானையை மீண்டும் குன்னூர் பர்லியார் பகுதிக்கு விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.