Thursday, February 29, 2024
Home » ஊட்டியில் செழிக்கும் ஆப்பிள் சாகுபடி!

ஊட்டியில் செழிக்கும் ஆப்பிள் சாகுபடி!

by Porselvi

நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில் தேயிலை சாகுபடிதான். திரும்பும் திசையெங்கும் பச்சை நிற போர்வையைப் போர்த்தியபடி ரம்மியமாக காட்சியளிக்கும் நீலகிரிக்கு அடையாளமே தேயிலைத்தோட்டங்கள்தான். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் பச்சைத் தங்கம் என வர்ணிக்கப்பட்டு வந்த பசுந்தேயிலைக்கு கடந்த 25 ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காததால், இதைப் பயிரிட்டு வரும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில், தேயிலைக்குப் பதிலாக மாற்று விவசாயம் மேற்கொள்ளும் வகையில் ஒரு சில விவசாயிகள் முன்முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். பல விவசாயிகள் சைனீஸ் வகை காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைச் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஊட்டி அருகே உள்ள அறைஹட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பத்மநாபன், தனது நண்பர்களுடன் இணைந்து கூக்கல், உபதலை, மேலூர், சின்னகுன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். நிலத்தில் தனிப்பயிராகவும், தேயிலைத் தோட்டத்தில் ஊடுபயிராகவும் சோதனை முயற்சியில் ஆப்பிள் சாகுபடி செய்த இவருக்கு வெற்றி கை கூடியிருக்கிறது. ஒரு காலைப்பொழுதில் விவசாயி பத்மநாபனைச் சந்தித்தோம்…
“நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படுவது தேயிலைதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் பாதிப்பு, உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் பெரிய அளவில் தேயிலை விவசாயிகள் பாதிப்படைந்து வருகிறார்கள். சில விவசாயிகள், விளைநிலத்தை விற்றுவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். சில விவசாயிகள் தேயிலைக்குப் பதிலாக சைனீஸ் வகை காய்கறிகள் பயிரிடுவது, அரிய வகை மூலிகைகளை வளர்த்து தைல நிறுவனங்களுக்கு விற்பது என செயல்பட்டு வருகிறார்கள். இப்படி மாற்று விவசாயத்தை நோக்கி செல்லும் விவசாயிகளோடு சேர்ந்து, லாபம் தரும் வகையில் தேயிலைக்கு மாற்றுப்பயிராகவும், தேயிலைத் தோட்டத்தில் ஊடுபயிராகவும் வேறு பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா? என்று ஆலோசித்தோம். அப்போது சில விவசாயிகள் ஆப்பிள் சாகுபடி குறித்து பேசினார்கள். ஆமாம். இது நல்லா இருக்கே! என எங்கள் அனைவருக்கும் தோன்றியது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறோம்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் பயிரிடப்பட்டது. ஊட்டி ஆப்பிள் என்கிற பெயரில் இந்தியா முழுவதும் விற்கப்பட்ட ஆப்பிள் சாகுபடியை விவசாயிகள் தொடராமல் விட்டு விட்டனர். இங்கு பயிரிடப்பட்ட ஆப்பிள்களைக் கொண்டுதான் சிம்லா ஆப்பிள் என்ற ஆப்பிள் வகையே கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் விவசாயிகள் தொடர்ந்து இங்கு ஆப்பிள் சாகுபடியில் ஈடுபடாததால் ஆப்பிள் விவசாயம் மறைந்து போனது. இந்நிலையில், நாங்கள் மீண்டும் நீலகிரியில் ஆப்பிள் விவசாயத்தை மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறோம்’’ என ஆப்பிள் விவசாயத்தில் மறுபிரவேசம் செய்த கதையோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தார் பத்மநாபன். “முதல்கட்டமாக இமாச்சல் பிரதேசத்தில் இருந்து ஒரு நாற்று ரூ500 என்ற விலையில் 2000 ஆப்பிள் நாற்றுகளை வாங்கி வந்து, இங்கு பல்வேறு பகுதிகளிலும் பயிரிட்டுள்ளோம். காலா, ஜெரோமின், ஸ்கார்லட், ஆடம்ஸ் மற்றும் கிங்ராட் என்ற 5 வகை ஆப்பிள்களை பயிரிட்டுள்ளோம். ஒரு ஏக்கருக்கு 400 முதல் 500 செடிகள் வரை நடவு செய்துள்ளோம். 10 அடி இடைவெளியில் ஒரு செடி என நடவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வகை ஆப்பிள் மரங்கள் மகசூல் தருவதற்கு நான்கு ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் இங்கு நடவு செய்த 2 வருடங்களிலேயே சில மரங்கள் காய்க்கத் தொடங்கி விட்டன.

ஆப்பிள் மரத்தைப் பொருத்தவரை முதல் வருட பராமரிப்பு மிகவும் முக்கியம். நாற்று நடுவது முதல் அது வளர்ந்து பயனளிக்கும் வரை வருடத்திற்கு மூன்று முறை உரங்கள் வைக்க வேண்டும். வளர்ச்சி ஊக்கியாகவும், கிருமி நாசினியாகவும் ஒரு மரத்திற்கு 5 கிலோ வீதம் மாட்டுச்சாணம் கொடுக்கப்படுகிறது. இயற்கை உரம் இல்லாதபோது கலப்பு உரங்கள் கொடுக்கலாம். அதேபோல தண்ணீர் கொடுப்பதிலும் கவனம் இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு மரத்திற்கு குறைந்தபட்சமாக ஒரு லிட்டர் அளவிலாவது தண்ணீர் விட வேண்டும். மழைக் காலங்களுக்கு ஏற்றபடி தண்ணீரின் அளவை நிறுத்திக் கொள்ளலாம். ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 10 டன் வரை ஆப்பிள்கள் அறுவடை செய்ய முடியும். கிலோ ஒன்று ரூ.80 முதல் 150 வரை விலை கிடைக்கும். இந்த ஆப்பிள் மரங்களைப் பாதுகாக்க தோட்டத்தை சுற்றிலும் முள்வேலிகள் அமைக்க வேண்டும். மேலும் பறவைகளிடம் இருந்து பழங்களைப் பாதுகாக்க நைலான் வலைகளை அமைக்க வேண்டும். முறையாக நீர்ப்பாசனம், உரங்கள் இட்டால் 4 ஆண்டுகளுக்குப் பின்பு காய்க்கத் துவங்கும். ஆப்பிள் மரங்களில் 35 ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும். இன்னும் 2 ஆண்டுகளில் இந்த மரங்களில் பழங்கள் பெருமளவில் கிடைக்கத் தொடங்கிவிடும்.

வட மாநிலங்களில் உள்ள இந்த ஆப்பிள் மரங்களில் 100 கிலோ முதல் 150 கிலோ வரை ஆப்பிள்கள் மகசூலாக கிடைக்கும். நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள இந்த ஆப்பிள் மரங்களில், அதே அளவுக்கு கிடைக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் 50 கிலோ முதல் 100 கிலோ வரை பழங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் ஒரு ஏக்கர் ஆப்பிள் தோட்டத்தில் சுமார் ரூ.10 லட்சம் வரை வருமானம் பார்க்கலாம். மேலும், ஆப்பிள் மரங்களை தேயிலைக்கு ஊடுபயிராகவும் நடவு செய்யலாம். தேயிலைக்கு ஊடுபயிராக நடவு செய்வதன் மூலம், தோட்டத்தில் உள்ள தேயிலைக்கு ஆப்பிள் சுவை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது நாங்கள் சோதனை முயற்சியாகவே ஆப்பிள் மரங்களை பயிரிட்டு இருக்கிறோம். இந்த முயற்சி தற்போது வெற்றி பெற்றிருப்பது உண்மைதான். இந்த நிலை நீடித்து, எங்களின் சாகுபடி முறையான வெற்றி பெற்றால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகளும் ஆப்பிள் சாகுபடியில் இறங்குவார்கள். அதற்கு நாங்கள் உரிய உதவிகளை செய்வோம்
என்கிறார்.
தொடர்புக்கு:
பத்பநாபன்: 94887 21665.

You may also like

Leave a Comment

three × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi