ஊட்டி : ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 2வது நீலகிரி புத்தக திருவிழா 2023-24 இன்று 20ம் தேதி துவங்குகிறது. அமைச்சர்கள் ராமசந்திரன், மனோ தங்கராஜ், நீலகிரி எம்பி ராசா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நூலகத்துறை சார்பில் நீலகிரி புத்தக திருவிழா 2023-24 ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் இன்று துவங்குகிறது. இதற்காக பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 40க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அருணா தலைமை வகிக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நீலகிரி எம்பி ராசா ஆகியோர் பங்கேற்று புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்ற உள்ளனர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் இயக்குநர் சீனு ராமசாமி, யதார்த்த சினிமாவும், இலக்கியமும் என்ற தலைப்பில் பேச உள்ளார். பின்னர் அவரது புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூைன என்ற புத்தகம் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து நீலகிரி இசைக்குயில் சீதாவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்க ஆய்வாளர் திருவிடம் உரையாற்றுகிறார். 21ம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை எழுத்தாய் மலர்வோம் என்ற தலைப்பில் இயக்குநர் மற்றும் திரைக்கலைஞர் பொன்வண்ணன் பேசுகிறார்.
22ம் தேதி அழகாய் ஆரம்பிக்கலாங்களா என்ற தலைப்பில் கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் ஆனந்த்குமார் பேசுகிறார். தொடர்ந்து முன்னாள் எஸ்பி., கலியமூர்த்தி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் பேசுகிறார். 23ம் தேதி சிகரம் நம் உயரம் என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசுகிறார். 24ம் தேதி உயரத்தில் வைத்தோரும், உயர வைத்தோரும் என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் மற்றும் சொற்பொழிவாளர் செந்தலை நா.கவுதமன் பேசுகிறார். கற்றது கடுகளவு என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் பேசுகிறார். 25ம் தேதி குறிஞ்சித்தமிழ் என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி பேசுகிறார்.
தொடர்ந்து திரைப்பட பாடலாசிரியர் மற்றும் நடிகர் சினேகன் பேசுகிறார். 26ம் தேதி தமிழ் கொஞ்சும் குறிஞ்சி என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர் நலன் ஆலோசனை உறுப்பினர் கோவி.லெனின் பேசுகிறார். புத்தக வாசிப்பு குறித்து விடுதலை திரைப்பட புகழ் கவிஞர் சுகா பேசுகிறார். 27ம் தேதி திரைத்துறை நோக்கிய பயணம் வளர்ச்சி பாதையா, கவர்ச்சி பாதையா என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் கவிதா பாரதி தலைமையில் விவாத மேடை நடக்கிறது.
தமிழ் நவீன இலக்கியத்தின் திசைப்போக்குகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பேசுகிறார். 28ம் தேதி இன்றைய தலைமுறையினருக்கு சமூக வலைதளங்கள் வரமா, சாபமா என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானாம்பிகா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. நல்லதொரு குடும்பம் என்ற தலைப்பில் கவிஞர் மோகனசுந்தரம் பேசுகிறார். 29ம் தேதி நிறைவு விழா நடக்கிறது.
இதுதவிர அனைத்து நாட்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. இப்புத்தக திருவிழாவானது மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்தும் ேநாக்கத்திற்காக நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். எனவே இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் அருணா கேட்டு கொண்டுள்ளார்.