ஊட்டி: ஊட்டியில் பூத்துள்ள டார்ச் லில்லி மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. நீலகிரியில் பல்வேறு வகையான காட்டுச் செடிகள் மற்றும் மரங்களில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். குறிப்பாக, ஜெகரண்டா, செர்ரி, சேவல் கொண்டை மலர்கள், எவர் லாஸ்ட், பிளேம் ஆப் தி பாரஸ்ட், டேலியா மற்றும் காட்டு சூரியகாந்தி மலர்கள் உட்பட பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்ட ரசித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், தற்போது டார்ச் லில்லி மலர்கள் பூத்து உள்ளது. இந்த மலர்கள் பொதுவாக பாறைகளின் மீது அதிகமாக காணப்படும். இவைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தொலைவிலிருந்து பார்க்கும் போது, தீச்சுடர் போன்று காட்சியளிக்கும். இதனாலேயே இதனை டார்ச் லில்லி மலர்கள் என்று அழைக்கின்றனர். தற்போது இந்த மலர்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் உள்ள பாறைகளில் பூத்துக் காணப்படுகிறது. இதில், குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு பகுதிகளிலும் இந்த மலர்கள் பூத்துக் காணப்படுகிறது. வேலிவியூ பகுதியில் பூத்துக் காணப்படும் இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் பலரும் கண்டு ரசித்து செல்கின்றனர்.