ஊட்டி: ஊட்டியில் உள்ள தேயிலை பூங்காவில் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக 15 ஆயிரம் வீரிய ரக தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் நஞ்சநாடு, கோல் கிரைன், காட்டேரி, தேவாலா, நாடுகாணி மற்றும் கல்லாறு போன்ற பகுதிகளில் பண்ணைகள் உள்ளன. இது தவிர ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் பூங்காக்களும் உள்ளன. இங்கு பல்வேறு நாற்று உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா பகுதியில் உள்ள தேயிலை பூங்காவில் பல்வேறு நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு அலங்கார தாவரங்கள், மூலிகை செடிகள், மரக்கன்றுகள் மற்றும் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இப்பூங்காவில் உள்ள நர்சரியில் பதியன் முறையில் தேயிலை நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.
15 ஆயிரம் உபாசி 9 என்ற வீரிய ரக தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு குளிரான காலநிலை நிலவும் நிலையில், நாற்றுகள் வளர ஏற்ற சூழ்நிலை உள்ளது. இந்த தற்போது துவக்க நிலையில் உள்ளதால், 6 மாதங்களுக்கு பிறகு விவசாயிகளுக்கு ரூ.4க்கு நாற்று ஒன்று விற்பனை செய்யப்படவுள்ளது. இது குறித்து தேயிலை பூங்கா அதிகாரிகள் கூறியதாவது, ‘‘ஊட்டி தேயிலை பூங்காவில் பல்வேறு மலர் நாற்றுகள், அலங்கார செடிகளின் நாற்றுகள், மூலிகை தாவரங்கள் மற்றும் தேயிலை நாற்றுகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் அனைத்தும் குறைந்த விலையில், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தேயிலை பூங்காவில் பதியன் முறையில் உபாசி 9 என்ற வீரிய ரக தேயிலை நாற்று உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நாற்றுகள் வளர்ந்தவுடன் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். இங்கு நிலவும் காலநிலை இந்த உபாசி 9 வகை தேயிலை நாற்றுகள் வளர ஏற்றதாக உள்ளது. விவசாயிகளின் தேவைக்கேற்ப மேலும் அதிகளவு தேயிலை நாற்றுக்கள் உற்பத்தி செய்யவும் திட்மிட்டுள்ளோம்’’ என்றனர்.