ஊட்டி : ஊட்டி ஆர்டிஓ அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்களில் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு உள்ளது. எனினும், பெரும்பாலான அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், மினி பஸ்கள், லாரிகள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் இது போன்ற தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஏர்ஹாரன்களை பள்ளி வளாகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் பயன்படுத்தும்போது, நோயாளிகள் மற்றும் மாணவர்கள் பாதிக்கின்றனர்.
இந்நிலையில், ஊட்டியில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா? என நேற்று ஊட்டியில் ஆர்டிஓ தியாகராஜன் உத்தரவின்பேரில், ஆய்வாளர் முத்துசாமி தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசு பஸ்கள் மற்றும் சில தனியார் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அந்த ஹாரன்கள் உடனடியாக அகற்றி பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ெபர்மிட் இன்றியும், தகுதிச்சான்று பெறாமல் வாகனங்கள் இயக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இது குறித்து ஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள் பயன்படுத்தக்கூடாது என வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு சில வாகனங்கள் தொடர்ந்து இது போன்று தடை செய்யப்பட்ட ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின் போது, இது போன்று தடை செய்யப்பட்ட ஹாரன்கள் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்ைக எடுக்கப்படும். மேலும், தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், மலைப்பாங்கான பகுதிகளில் வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுநர்கள் இயக்க வேண்டும்’’ என்றனர்.