ஊட்டி : ஊட்டி நகராட்சி கூட்டத்தில் புதிதாக வந்துள்ள கமிஷனர் தாங்கள் சொல்லும் பணிகளை விரைந்து முடித்து கொடுப்பதாக கூறி, பெண் கவுன்சிலர்கள் அனைவரும் பாராட்டி மரியாதை செய்தனர். ஊட்டி நகராட்சிக்கு புதிய கமிஷனராக வினோத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பணியில் ஊட்டி நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்று 20 நாட்கள் மட்டுமே ஆகிறது.
இதில், பாதி நாட்கள் அவர் திருப்பூர் நகராட்சிக்கும் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், ஊட்டி நகராட்சியில் உள்ள பெண் கவுன்சிலர்கள் தங்களது வார்டில் ஏதேனும் பிரச்னை உள்ளது. பணிகள் மேற்கொள்ள வேண்டும் என இவரை தொலைபேசி மூலம் அழைத்தால், அங்கு உடனடியாக சென்று அந்த பணிகளை நிறைவேற்றி தருகிறாராம்.
மேலும், செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் எந்த நேரத்திலும் எடுத்து பதில் அளிக்கிறாராம். இதுவரை இருந்த கமிஷனர்கள் இது போன்று பெண் கவுன்சிலர்களுக்கு மரியாதை கொடுத்ததில்லை. மேலும், எங்கள் வார்டிற்கு வந்து குறைகளையும் கேட்டதில்லை.
எனவே, குறுகிய காலத்திற்குள் எங்கள் பணிகளை செய்து கொடுப்பது மட்டுமின்றி, எங்களுக்கு மரியாதை அளிக்கும் நகராட்சி கமிஷனருக்கு பாராட்டு தெரவிக்கிறோம் என அனைத்து பெண் கவுன்சிலர்களும் நகர்மன்ற கூட்டத்தில் கமிஷனருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், அவருக்கு அனைவரும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, நகராட்சி தலைவர் வாணீஸ்வரியும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.