ஊட்டி : ஊட்டியில் நேற்று முன்தினம் மாலை கொட்டி தீர்த்த கனமழையால் கோடப்பமந்து கால்வாயில் அடித்து வரப்பட்ட ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பைகள் ஏரியின் நுழைவுவாயில் பகுதியில் மலைபோல் குவிந்துள்ளதால் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஊட்டி ஏரி ஆங்கிலேயர் காலத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. காலபோக்கில் கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைய துவங்கியது. நகரின் நடுவே சுமார் 2 கிமீ. தூரம் பயணித்து கோடப்பமந்து கால்வாயில் வரும் தண்ணீர் ஏரியில் கலக்கிறது.
கால்வாயின் இரு புறங்களிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள், கிழிந்த துணி, ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகள், காய்கறி மற்றும் மனித கழிவுகள் உட்பட அனைத்து விதமான கழிவுகளையும் இதில் கொட்டி விடுகின்றனர். இதுதவிர மழை காலங்களில் அடித்து வரப்படும் மண் குவியல்களும் ஏரியில் குவிகின்றன. இதனை தடுக்க பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குப்பைகள் கால்வாயில் வீசி எறிவதை தடுக்கும் நோக்கில் கால்வாயின் இருபுறமும் பக்கவாட்டில் தகர சீட் கொண்டு 7 மீட்டர் உயரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஏரி மாசடைவதை தடுக்க கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், திடக்கழிவுகள் போன்றவைகளை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும் மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்கிறது. கோடப்பமந்து கால்வாயில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் ஏரிக்குள் செல்லாமல் இருக்க சிறுவர் பூங்கா பின்புறம் ஏாி நுழைவுவாயில் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இப்பகுதியில் கால்வாயின் குறுக்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கால்வாயில் வர கூடிய குப்பைகள் இந்த தடுப்பில் தடுக்கப்பட்டு நீர் மட்டும் ஏரிக்குள் செல்லும். நேற்று முன்தினம் மாலை ஊட்டியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பஸ் நிலைய பகுதியில் அடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து கழக பணிமனைக்குள் மழைநீர் புகுந்தது. இதனிடையே கால்வாயில் மழைநீருடன் அடித்து வரப்பட்ட ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் அடித்து வரப்பட்டு சுத்திகரிப்பு நிலைய பகுதிகளிலும் உள்ள தடுப்பு பகுதியிலும், ஏரியின் நுழைவுவாயில் பகுதியிலும் மலைபோல் குவிந்துள்ளன.
இவற்றை நேற்று காலை 6 மணி முதல் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கோடப்பமந்து கால்வாயில் குப்பைகளை வீசி எறிய வேண்டாம் என வலியுறுத்தப்பட்டாலும், குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் வீசி எறியப்படுகின்றன. இதனால், கால்வாயை எத்தனை முறை தூர்வாறினாலும் பலனில்லை.
குப்பைகளால் மழைநீர் செல்ல வழியின்றி படகு இல்ல சாலை, போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்ட இடங்களில் சேர்வதுடன் ஏரியும் அசுத்தமடைந்து வருகிறது. கால்வாய் நகருக்கு மத்தியில் வருவதால் கால்வாய் பகுதியில் சிசிடிவி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். குப்பைகள் கொட்டுபவர்களை ஆதாரத்துடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்றனர்.