*சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் பேட்டி
ஊட்டி : காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி பொதுமக்கள் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன எம்ஆர்ஐ., ஸ்கேன் இயந்திரம் மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம் என ஆய்வுக்கு பின் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்பிஎப்., பகுதியில் ரூ.467 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் விரைவில் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் மற்றும் பண்ருட்டி எம்எல்ஏ.,வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்களான எம்எல்ஏ.,க்கள் அருள்,நல்லதம்பி,மோகன்,ஜயக்குமார் மற்றும் இணை செயலாளர் கருணாநிதி, துணை செயலாளர் ரவி, சார்பு செயலாளர் பியூலஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.
முதலாவதாக ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் அவசர சிகிச்சை பிரிவு,அங்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் எம்ஆர்ஐ., ஸ்கேன் இயந்திரம், சிடி., ஸ்கேன் இயந்திரம், ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி விளக்கமளித்தார். இந்த ஆய்வின் போது கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உடனிருந்தார்.
தொடர்ந்து உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதல்வர்,அமைச்சர்கள் மக்களுக்கான நலத்திட்டங்கள், பல்வேறு மேம்பாட்டு பணிகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.எம்எல்ஏ.,க்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போதும், கேள்வி நேரத்தின் போதும் பதிலளித்து கொடுக்கின்ற உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இக்குழு ஆய்வு செய்யும்.அவ்வாறாக நீலகிரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு செய்து வருகிறோம்.
இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என 2019ம் ஆண்டு உறுதிமொழி அளிக்கப்பட்டு, அப்பணிகள் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது.கடந்த 2021ம் ஆண்டு 150 மாணவர்களுடன் கல்லூரி செயல்பட்டு வருகிறது.மருத்துவமனையும் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. 2010ம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ., ஸ்கேன் அமைக்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்ட நிலையில் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டு எம்ஆர்ஐ., ஸ்கேன் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.இதுதவிர ஆக்ஸிஜன் பிளாண்ட் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மருத்துவக்கல்லூரி தொடர்பான 4 உறுதிமொழிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வந்தவுடன், அதுதொடர்பான அறிக்கையை குழுவின் முன் சமர்பிக்க கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள எம்ஆர்ஐ., ஸ்கேன் சேவையை பயன்படுத்த முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.காப்பீட்டு திட்டம் இல்லாதவர்கள் ரூ.2500 முதல் ரூ.2700 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம், என்றார். தொடர்ந்து ஊட்டி காக்காதோப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடியிருப்புகளை பார்வையிட்டனர்.
பின்னர், ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய பார்சன்ஸ்வேலி அணையினை ஆய்வு செய்த குழுவினர், குடிநீர் விநியோகம் செய்யும் முறைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.மேலும் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்வையிட்டனர்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான மருந்து பெட்டகங்களை வழங்கினர். இத்திட்டத்தின் கீழ் நோயாளிகளின் இல்லங்களுக்கு சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கப்படுவதை சுகாதாரத்துறை பணியாளர்களிடம் கேட்டு உறுதி செய்தனர்.
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், ஊட்டி ஆர்டிஒ., மகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் நாகபுஷ்பராணி,சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வகுமார்,மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா,குந்தா நீர் மின் உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியாளர் முரளி, நகராட்சி ஆணையர் ஜாஹாங்கீர் பாஷா உட்பட பலர் உடன் இருந்தனர்.