Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் கார்டனில் அடிப்பகுதி அறுத்த மரத்தால் விபத்து அபாயம்

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் கார்டன் பகுதியில் அடிப்பகுதியில் பாதி அறுத்த நிலையில் விடப்பட்ட ராட்சத கற்பூர மரத்தால் விபத்து அபாயம் நீடிக்கிறது.நீலகிரி மாவட்டத்தில் பருவமழை சமயங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு, குடியிருப்புகளின் மீது மரங்கள் விழுதல் போன்ற பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக சாலைகள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி காணப்படும் ராட்சத கற்பூர மரங்கள், சீகை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுகின்றன.

மேலும் வாகனங்கள் மீதும், குடியிருப்புகள் மீதும் விழுந்து பொருட்சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் பழமை வாய்ந்த கற்பூர மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தாண்டுக்கான பருவமழை கடந்த மே மாதத்தில் துவங்கியது.

பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராட்சத மரங்கள் சாலைகளிலும், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் மீதும் விழுந்தன. ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரள சிறுவனும் மரம் விழுந்து உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அபாயகர மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் மேற்புறம் இத்தாலியன் கார்டன் உள்ளது. இதன் மேற்புறம் ராட்சத கற்பூர மரம் உள்ளது.

இந்த மரம் விழும் பட்சத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் மரத்ைத வெட்டி அகற்ற பூங்கா நிர்வாகம் திட்டமிட்டது. இதனை தொடர்ந்து அதன் அடிபாகத்தை வெட்டியுள்ளனர்.

அதன் பின் அப்படியே விட்டு விட்டனர். அண்மையில் காற்றுடன் பெய்த மழையின் போது அதிஷ்டவசமாக இந்த மரம் விழவில்லை.

இந்த சூழலில் இனிவரும் காலங்கள் மழை காலங்கள் என்பதால் அடிப்பகுதி வெட்டப்பட்ட இந்த மரம் எந்த சமயத்திலும் விழுந்து பாதிப்பை ஏற்படுத்த கூடிய அபாயம் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மரத்தை வெட்டி அகற்றிட வேண்டும் என வலியுறத்தப்பட்டுள்ளது.