ஊட்டி : ஊட்டியில் நேற்று காலை ேவளையில் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால் குளிரான காலநிலை நிலவியது. பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே சென்றனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 13ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை துவங்கியது. துவங்கியது முதல் பலத்த சூறாவளி காற்றுடன் தீவிரம் காட்டியது. இதனால் முக்கிய சாலைகள், குடியிருப்புகளில் மரங்கள் விழுதல், மண்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன.
இவை உடனுக்குடன் வெட்டி அகற்றப்பட்டன. 20 நாட்களுக்கும் மேலாக பெய்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள், குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகள் நிரம்பின. இந்நிலையில் கடந்த 1ம் தேதிக்கு பின் மழை குறைந்து பனிமூட்டமான காலநிலை நிலவி வருகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஊட்டி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் குளிரான காலநிலை நிலவியது.
நேற்று அதிகாலை துவங்கி 10 மணி வரை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மெதுவாக பயணித்தனர். நகரின் நடமாடிய மக்கள் வெம்மை ஆடைகள் அணிந்தபடி நடமாடினர். தொடர்ந்து 10 மணிக்கு பின் பனிமூட்டம் விலகி லேசான வெயிலான காலநிலை நிலவியது. மாலையில் மீண்டும் மழை பெய்தது.