*அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வலியுறுத்தல்
ஊட்டி : அரசாணை 293 மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி ஊட்டியில் அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மருத்துவ நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊதிய உயர்வு வேண்டி 4 ஆண்டுகளாக நடத்திய பல கட்ட போராட்டங்களின் பலனாக, தமிழ்நாடு அரசு அரசாணை 293-ஐ கடந்த 18.06.2021ம் அன்று வெளியிட்டது.
மேலும் கொரோனா பெருந்தொற்று, இயற்கை இடர்பாடுகள் என அரசு மருத்துவர்களின் சவாலான பணிச்சுமைைய கருத்தில் கொண்டும், அவர்களின் நலன்காக்கும் பொருட்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த அரசாணையை வெளியிட்டார். சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் இடையேயான ஊதிய நிலைகளில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி அரசு மருத்துவர்களின் காலமுறை சார்ந்த ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கையை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், மேற்படிப்பு,
பணியிட சவால் போன்றவற்றை கருத்தில் கொண்டு அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வு அரசாணையை தமிழ் நாடு அரசு வெளியிட்டது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசாணை அமுல்படுத்தப்படவில்லை என தெரிகிறது. எனவே, இந்த அரசாணையை அமல்படுத்த பல்வேறு நிலைகளில், பல மாவட்டங்களில் பலமுறை வலியுறுத்தியும் உரிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் நிலுவைத் தொகையோடு உரிய பணப்பலன்களை வழங்க ஆணையிட்டுள்ளது.
இதையடுத்து, அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் உடனடியாக கிடைக்க அரசாணை 293 மற்றும் உயர்நீதிமன்ற ஆணையை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து நேற்று உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் அந்தந்த மருத்துவமனைகளில் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் ஊட்டி சேட் மகப்பேறு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தொடர்ந்து இது தொடர்பான மனுவினை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பத்மினியிடம் வழங்கினர்.