ஊட்டி : ஊட்டி நகர திமுக சார்பில் மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்தும், லேசான மண் சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதி மக்களை மாவட்ட நிர்வாகம் நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளது. ஊட்டியில் மஞ்சன கொரை, அன்பு அண்ணா காலனி பகுதிகளில் அபாயகரமாக உள்ள இடங்களில் வசிக்கும் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊட்டி ஜெல் மெமோரியல் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகள் மற்றும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இருந்தபோதும், ஊட்டி நகர திமுக., சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று இந்த முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் ஏற்பாட்டின் பேரில் இந்த மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊட்டி நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன், கவுன்சிலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் மதிய உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் புஷ்பராஜ், மாதேவன், கமலக்கண்ணன், சுரேஷ், காந்தல் சம்பத், பெரியசாமி, செல்வராஜ், ஹென்றி ஜேம்ஸ், உமேஷ், மகேஷ், மணியட்டி செந்தில்குமார், விஷ்ணுகுமார், சத்யராஜ், வில்லியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.