ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா பெரணி இல்லம் மீண்டும் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். மேலும், பல ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு அவைகள் அனைத்தும் கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இதுதவிர பூங்காவில் பல லட்சம் பெரணி செடிகள் வைக்கப்பட்டுள்ள பெரணி இல்லம் (கண்ணாடி மாளிகை) உள்ளது. இந்நிலையில் பெரணி இல்லம் வலுவிழந்து சேதம் அடைந்ததுடன், மேற்கூரைகளில் உள்ள கண்ணாடிகள் அவ்வப்போது விழுந்து வந்தன. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பெரணி இல்லம் மூடப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. இந்த பணி கடந்த மார்ச் மாதம் துவங்கி மே மாதம் முடிவடைந்தது.
சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டி மலர் கண்காட்சி துவக்க நாளின் போது திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பெரணி இல்லம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணங்கள் ஏமாற்றம் அடைந்தனர்.