*விதைகள் சேகரிக்கும் பணி துவக்கம்
ஊட்டி : ஊட்டியில் முதல் சீசன் முடிந்த நிலையில், இரண்டாவது சீசனுக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை. விதை சேகரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்துச் செல்கின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம்.
ஆண்டுதோறும் முதல் சீசன் மற்றும் இரண்டாம் சீசன் போது மலர் செடிகள் நடவு செய்யப்படும். மேலும், செடிகளில் மலர்கள் பூத்தவுடன் பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசனும் அனுசரிப்பது வழக்கம்.
இம்முறை கடந்த ஏப்ரல் மாதம் முதல் சீசன் துவங்கிய நிலையில் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கின. மேலும், மே மாதம் மலர் கண்காட்சியின் போது தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இதனை கடந்த இரு மாதங்களுக்கு மேலாக ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்நிலையில், முதல் சீசன் முடிந்த நிலையில், தற்போது பூங்காவில் உள்ள பெரும்பாலான மலர் செடிகள் காய்ந்துள்ளன. அவ்வப்போது பெய்யும் மழையில் மலர்களும் அழுக துவங்கியுள்ளன.
இந்நிலையில், இரண்டாம் சீசனுக்கான விதைகள் சேகரிக்கும் பணிகளும் தற்போது துவக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள சால்வியா, மேரிகோல்டு உள்ளிட்ட பல்வேறு மலர்களில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
சேகரிக்கப்பட்ட விதைகள் பதப்படுத்தப்பட்ட பின், இரண்டாம் சீசனுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளப்பட்ட பின், மீதமுள்ள விதைகள் விற்பனைக்கு வைக்கப்படும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.