ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பெரும்பாலான மலர்கள் மழை காரணமாக அழுகிய நிலையில் செலோசியா மலர்கள் மட்டும் பூத்துக்குலுங்குகின்றன. ஊட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மலைவாச சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.
இங்கு நிலவும் மிதமான சீதோசன நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாத கோடை சீசனில் மட்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வண்ண வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
இந்த சூழலில் கோடை சீசன் முடிவடைந்த நிலையில், ஊட்டியில் கனமழை கொட்டியது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பாத்திகளில் நடவு செய்யப்பட்ட டேலியா உள்ளிட்ட பல்வேறு மலர்கள் அழுகின.
அதே சமயம் இத்தாலியன் கார்டன் பகுதியில் பாத்திகளில் நடவு செய்யப்பட்ட செலோசியா நாற்றுகளில் சிவப்பு, அடர் சிவப்பு என பல வண்ணங்களில் பூத்துக்குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.