ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக்குலுங்கும். மேலும், பல ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு அவைகள் அனைத்தும் கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இதுதவிர பூங்காவில் பல லட்சம் பெரணி செடிகள் வைக்கப்பட்டுள்ள பெரணி இல்லம் (கண்ணாடி மாளிகை) உள்ளது. மேலும், பல்லாயிரம் கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை மேல் கார்டன் பகுதியில் உள்ளது. இவைகள் இரண்டும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது அமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகை ஆகும். தற்போது பூங்காவில் உள்ள பெரணி இல்லம் மற்றும் கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை இரண்டுமே வலுவிழந்து சேதம் அடைந்தது. சுற்றுலாப் பயணிகள் இந்த கண்ணாடி மாளிகைக்குள் செல்லும்போது மேற்கூரையில் உள்ள கண்ணாடிகள் விழுந்தால் விபத்து ஏற்படும் என்ற நோக்கில் கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இந்நிலையில் இந்த கண்ணாடி மாளிகைகளை சீரமைக்க வேண்டும் எனவும், பழமை மாறாமல் இந்த கண்ணாடி மாளிகைகளை சீரமைக்க வேண்டும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கண்ணாடி மாளிகைகள் சீரமைப்பதற்கான பணிகளை தோட்டக்கலைத் துறை துவக்கி உள்ளது. முதற்கட்டமாக ஊட்டி மேல் கார்டன் பகுதியில் அமைந்துள்ள கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி மாளிகை சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது. இதற்காக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கண்ணாடி மாளிகையில் உள்ள மேற்கூறையில் இருந்த அனைத்து கண்ணாடிகளும் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. வரும் கோடை சீசனுக்குள் இந்த பணிகளை முடித்து கோடையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த கண்ணாடி மாளிகையை காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.