*சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு
ஊட்டி : ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கோடை சீசனின் போது வரும் சுற்றுலா பயணிகளுக்காக மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் போது பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களும் சேதம் அடைகின்றன. குறிப்பாக, பெரிய புல் மைதானத்திற்குள் அனைத்து சுற்றுலா பயணிகளும் குவியும் நிலையில், அங்குள்ள புற்கள் அனைத்தும் சேதம் அடைவது வழக்கம்.
மேலும், மழை பெய்யும் சமயங்களிலும் சுற்றுலா பயணிகள் இந்த புல் மைதானங்களில் ஓடி ஆடி விளையாடுவதால் புற்கள் நாசமாகி விடுகின்றன. இம்முறையும் அதேபோல், பெரிய புல் மைதானம், சிறிய புல்மைதானம், பெர்ன் புல் மைதானம் ஆகியவை கோடை சீசன் போது மழையால் நாசமாயின. இந்நிலையில், சிறிய புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்தது.
இதனால், பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தற்போது பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணிகளை பூங்கா நிர்வாகம் துவக்கியுள்ளது. இதனால், பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவர்.