ஊட்டி : ஊட்டி ஏடிசி., மைதானத்தில் உள்ள புதர்களில் பதுங்கி இருக்கும் தெருநாய்கள் விளையாட வருவோர் உள்ளிட்ட அனைவரையும் விரட்டுவதால் கடும் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஏடிசி., பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. 2.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த விளையாட்டு மைதானம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி கட்டுபாட்டில் உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இங்கு அவ்வப்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இதுதவிர விடுமுறை நாட்களில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் விளையாடுவார்கள்.
இப்பகுதியின் ஒருபகுதியில் வட்டார வள மையம் அமைந்துள்ளது. பராமரிப்பின்றி காட்சியளிக்கும் இம்மைதானத்தில் சில இடங்கில் புதர் செடிகள் வளர்ந்துள்ளன.மார்க்கெட் மற்றும் ஏடிசி., பகுதியில் சுற்றி திரிய கூடிய 15க்கும் மேற்பட்ட நாய்கள் இப்புதரில் ஓய்வெடுக்கின்றன. சமீப காலமாக இம்மைதானத்திற்கு விளையாட வரும் மாணவர்களை விரட்டுகின்றன. வட்டார வள மையத்தில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.அவர்களையும் விரட்டுகின்றன. இதனால் அவர்கள் அலுவலகத்ைத விட்டே வெளியில் வர அச்சப்படுகின்றனர்.
இதுதவிர இம்மையத்திற்கு ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள்,புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் வருகின்றனர். அவர்களையும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து விரட்டி விரட்டி துரத்துகின்றன. இதனால் அவர் அச்சத்துடன் அலறியடித்து ஓட்டம் பிடிக்க கூடிய சூழல் நிலவுகிறது.
எனவே பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் இப்பகுதியில் இடையூறாக உள்ள தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மைதானத்தில் வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.