ஊட்டி : ஊட்டி அருகே கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்தி தரக்கோரி சோலாடா அரசு பள்ளி மாணவர்கள் ஊட்டி – மசினகுடி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே கல்லட்டி, சோலாடா உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. சோலாடா கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாத நிலையில், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
பல முறை இப்பள்ளி மாணவர்கள் சார்பில் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் (வகுப்பறைகள்) கட்டித்தர வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தராத நிலையில், மாணவ, மாணவிகள் குறைந்த வகுப்பறைகளில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி நேற்று பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊட்டி – மசினகுடி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அங்கு சென்ற ஊட்டி ஆர்டிஓ சதீஷ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்படவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், இந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.