ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதியை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேன்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை நேரு சாலையில், காவல் நிலையம் அருகில் 1989ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில், நெடுஞ்சாலை துறையினர் பயணியர் தங்கும் விடுதி கட்டிடம் கட்டினர். முக்கிய பிரமுகர்கள் யாராவது வந்தால் தங்குவதற்கும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்கும் இந்த கட்டிடம் கட்டப்பட்து. இந்த பயணியர் விடுதி 10 வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு 2000ம் வருடத்தில் இருந்து, இந்த பயணியர் விடுதி பொருள் வைப்பு கிடங்காக மாறியது. அதன்படி நெடுஞ்சாலை துறையினர் பொருட்கள் வைக்க மட்டுமே இதனை பயன்படுத்தி வந்தனர்.
மேலும் 2011ல் இருந்து, இந்த பயணியர் விடுதியைச் சுற்றி செடி, கொடிகள் படர்ந்து முட்புதர்கள் சூழ்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பாம்பு, விஷப்பூச்சிகள் படையெடுத்து அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் காவல் நிலைய பகுதிகளுக்கும் சென்று விடுகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் எப்போதும் அச்சத்துதுடன் உள்ளனர். கடந்த வருடம் நெடுஞ்சாலை துறையினர் இந்த விடுதியை சுற்றியுள்ள புதர்களை அகற்றினர். தற்போது அந்த இடம் காலியாக உள்ளதால், காவல் துறையினர் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பைக்குகளை அங்கு நிறுத்தி வைத்துள்ளனர். எனவே இந்த வாகனங்களை போலீசார் ஏலம் விட வேண்டும் அல்லது சேதமடைந்து கிடக்கும் பயணியர் தங்கும் விடுதியை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.