ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே 43 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தில் இருந்த குடிநீர் பைப்லைனை மர்ம நபர்கள் உடைத்ததால், நேற்றிரவு பெரம்பூர் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற கல்வீச்சில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த 43 பேருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கியதற்கு, இதன் அருகிலுள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் 43 பேரும் கொட்டகை போட்டுள்ளனர். இதற்கு பெரம்பூர் கிராம மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சமரசப் பேச்சுவார்த்தையின்போது, தங்களுக்கு 3 நாள் அவகாசம் தரக்கோரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு குடியேற அனுமதிக்கப்படாத 43 பேரும் கடந்த 2 நாட்களாக கொட்டகை போட்ட இடத்துக்கு சென்று, சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 43 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தில் பெரம்பூர் கிராமத்துக்கு குடிநீர் பைப்லைன் செல்கிறது. இந்த பைப்லைனை நேற்றிரவு மர்ம நபர்கள் யாரோ உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள், அங்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியதில் கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது போலீசார்மீது கல்வீசப்பட்டதில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த மக்கள், அங்குள்ள பேருந்து நிலையம் அருகே பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருவள்ளூர் ஏடிஎஸ்பி மீனாட்சி விரைந்து வந்து, பெரம்பூர் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பெரம்பூர் கிராமத்தில் நள்ளிரவு 12 மணிவரை பரபரப்பு நிலவியது.