ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை சிறப்பு எஸ்.ஐ.யை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றுபவர் பாஸ்கர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு சம்மந்தமாக காவல் நிலையத்திற்காகச் சென்ற வழக்கறிஞர்களுக்கும் எஸ்.ஐ.பாஸ்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிறப்பு எஸ்.ஐ.யை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இதையறிந்த வழக்கறிஞர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
அப்போது, வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும், வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்கு வரக்கூடாது எனக் கூறும் காவல் துறையினர், ஊத்துக்கோட்டை நீதி மன்றத்திற்கு வரக்கூடாது, எஸ்.எஸ்.ஐ. பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் 5ம் தேதி முதல் தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி நேற்று 2வது நாளாக வக்கீல்கள் சங்க தலைவர் வேல்முருகன் தலைமையில் செயலாளர் கவிபாரதி, பொருளாளர் நரசிம்மன் முன்னிலையில் 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க துணைத்தலைவர் சாந்தகுமார், இணைச்செயலாளர் சூர்யா, மூத்த வக்கீல்கள் குணசேகரன், பார்த்திபன், வெற்றி தமிழன், சீனிவாசன், முனுசாமி, ராஜசேகர், பாலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.