திருவனந்தபுரம்: உம்மன் சாண்டியின் மகள் அச்சு உம்மனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பியது தொடர்பாக முன்னாள் அரசு உயரதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகள் அச்சு உம்மன். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். குறிப்பாக கேரள அரசு சுகாதாரத் துறையில் கூடுதல் செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நந்தகுமார் என்பவர் இந்தக் கருத்துக்களை அதிகளவில் பகிர்ந்தார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவார். இந்நிலையில் அச்சு உம்மன் திருவனந்தபுரம் பூஜப்புரா போலீசிலும், மகளிர் ஆணையத்திலும் புகார் செய்தார். இதையடுத்து நந்தகுமார் தன்னுடைய முகநூல் மூலம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் தன்னுடைய புகாரை வாபஸ் பெறப் போவதில்லை என்று அச்சு உம்மன் கூறினார். இந்நிலையில் நந்தகுமார் மீது பூஜப்புரா போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.