ஊத்தங்கரை : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி கெடகானூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்குத்தி நீர் வீழ்ச்சியில், வற்றாத அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் இந்த அங்குத்தி சுனை உள்ளது. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில், இந்த இடம் அமைந்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக்க இந்த இடம் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. வற்றாத நீர் நிலையாக ஐந்து நீர் நிலைகள் இதில் உள்ளது. இதற்கு பாண்டவர்களின் பெயர்களான தர்மன், அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் என ஐந்து பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.
குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் இடமாக அங்குத்தி நீர் வீழ்ச்சி உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து மத்தூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை அங்குத்தி நீர் வீழ்ச்சியை அடையலாம். மேலும் ஊத்தங்கரையில் இருந்து மாரம்பட்டி, கோவிந்தாபுரம் வழியாக கெடகானூர் சென்றும், அங்குத்தி நீர் வீழ்ச்சியை அடையலாம். ஜவ்வாது மலையில் நிறைந்துள்ள மூலிகை செடிகளின் ஊடே வரும் அங்குத்தி அருவி நீர் நோய்களை தீர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது. தண்ணீர் வற்றாமல் இருப்பதால் அங்குத்தி நீர் வீழ்ச்சிக்கு, மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.
பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணமாக ₹30 வசூலிக்கப்படுகிறது. ட்ரெக்கிங், நீர்வீழ்ச்சியில் குளிப்பது போன்ற அனுபவங்களை பெறலாம். இந்நிலையில் தீபாவளி தொடர் விடுமுறை காரணமாகவும், ஞாயிறு விடுமுறை தினமான நேற்று அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீர் வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.