திண்டுக்கல்: பாஜவுக்கு சீட்டு கொடுப்பது பற்றியே எடப்பாடிதான் முடிவு எடுப்பார் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும். திமுகவுக்கு மாற்றாக அதிமுக தான் இருக்கிறது என சாதாரண மனிதர்களுக்கும் தெரியும். அதிமுக தலைமையிலான கூட்டணி என்றுதான் அமித்ஷா கூறியுள்ளார்.
எடப்பாடி தான் சீட்டு கொடுப்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுப்பார். அதிமுக என்றால் எடப்பாடி. எடப்பாடி என்றால் அதிமுக என்பது அமித்ஷாவிற்கு தெரியும். கூட்டணி ஆட்சி இல்லை என எடப்பாடி தெளிவாக கூறியுள்ளார். அவர் சொல்வதுதான் இறுதி முடிவு. அதிமுகவுடன் தவெக இணைய வாய்ப்புள்ளதா என்றால், அரசியலில் என்ன நடக்கும் என்று ஜோசியம் சொல்ல முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எந்தக் கட்சி எங்கு வேண்டுமானாலும் வரலாம். போகலாம். அதிமுகவில் எதிர்பாராத கட்சிகள் கூட்டணிக்கு வந்து சேரும். இவ்வாறு தெரிவித்தார்.