காரைக்குடி: அதிமுக மட்டுமே பாஜ வலையில் சிக்கி உள்ளது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசலில், புதுப்பிக்கப்பட்ட மாவட்ட விசிக அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை பேரணி என்பது தேசத்தின் நலனை கொண்டு ஒருங்கிணைக்கும் பேரணி. தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாகவில்லை. தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து அமித்ஷா வருகிறார். கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார். அதிமுக மட்டுமே பாஜ வலையில் சிக்கி உள்ளது. மற்ற கட்சிகள் உடன்படவில்லை. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இன்னும் கூட்டணி வடிவம் பெறவில்லை. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, வெற்றி வாய்ப்பை பெறும் வலுவான கூட்டணியாக உள்ளது. கூட்டணியில் வேறு கட்சிகள் இணைவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.
பாமகவில் நடப்பது உள்கட்சி விவகாரம். பாமக இடதுசாரி அரசியலை முன்னிறுத்தி வெற்றி பெற்ற இயக்கம். தற்போது பாமகவில் வலதுசாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்துவது கவலை அளிக்கிறது. வலதுசாரிகள் தலையீடு இருந்தால் தனித்து இயங்குவதில் சிக்கல் என்பதை கடந்த காலங்கள் உணர்த்தி இருக்கிறது. பாஜ இந்தியை தேசிய மொழியாக்க முயற்சிக்கிறது. இந்தியாவுக்கு ஒற்றை தேசிய மொழி என்பது கிடையாது. மணிப்பூர் கலவரம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதே பாஜவின் விருப்பம். மணிப்பூர் கலவரத்திற்கு பாஜ தான் முழு பொறுப்பு. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பாஜ முயற்சி செய்யவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.