புதுடெல்லி: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் ஆன்லைன் தளம் பிக்பில்லியன் டேஸ் விற்பனை நடத்தியது. பல்வேறு பொருட்கள் சலுகை விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருவதால் பெரிய திரையில் பார்க்க விரும்பிய ஆர்யன் என்பவர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சோனி பிராவியா எக்ஸ் 7 கே 55 இன்ஞ் டிவியை பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து இருந்தார். ஆனால் அவருக்கு தாம்சன் டிவி சப்ளை செய்யப்பட்டது. இதை மாற்ற அவர் பலமுறை விண்ணப்பித்தும் 20 நாட்களாகியும் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதுபற்றி அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. அதில்,’நான் அக்டோபர் 7 ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் சோனி டிவியை ஆர்டர் செய்தேன். கடந்த 10ம் தேதி எனக்கு டிவி டெலிவரி செய்யப்பட்டது. 11ம் தேதி சோனி நிறுவன ஊழியர் டிவியை பொருத்துவதற்காக எனது வீட்டிற்கு வந்தார். அவர் டிவி இருந்த அட்டை பெட்டியை அன்பாக்ஸ் செய்தார்.
உள்ளே சோனி டிவிக்கு பதில் தாம்சன் டிவியைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். சோனி பாக்ஸிலும் ஸ்டாண்ட், ரிமோட் போன்ற துணைக்கருவிகள் எதுவும் இல்லை. உடனடியாக பிளிப்கார்ட்டின் வாடிக்கையாளர் சேவையுடன் தொடர்பு கொண்டு பிரச்சினை பற்றி கூறினேன். அவர்கள் என்னை டிவியின் படங்களை பதிவேற்றச் சொன்னார்கள். அவர்கள் அறிவுறுத்தியபடி படங்களை பதிவேற்றினேன். அதே போல் இன்னும், அவர்கள் படங்களை பதிவேற்றும்படி மூன்று முறை என்னிடம் கேட்டார்கள். அவர்கள் கேட்டபடி நானும் பதிவேற்றினேன். இருப்பினும் எனது ரிட்டர்ன் கோரிக்கையைச் செயல்படுத்தவில்லை. முதலில் எனக்கு அக்டோபர் 24ம் தேதி பிரச்னை சரிசெய்யப்படும் என்றார்கள். ஆனால் 20ம் தேதி அதைத் தீர்த்துவிட்டதாக கூறியுள்ளனர்.
அதுபற்றி நான் கேள்வி எழுப்பிய பின்னர் நவம்பர் 1ம் தேதி வரை நீட்டித்தார்கள். இன்றும்(அக்.25) அந்தப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாகக் காட்டினார்கள். ஆனால் என்னுடைய ரிட்டர்ன் கோரிக்கை அப்படியே உள்ளது. சரிசெய்யப்படவில்லை. பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஒரு டிவி வாங்குவதற்காக நான் காத்திருந்தேன். அதனால் உலகக் கோப்பையை ஒரு நல்ல பெரிய திரையில் பார்க்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் பிளிப்கார்ட்டின் இந்த சேவை என்னை மன அழுத்தத்தில் தள்ளியுள்ளது. இது உண்மையில் தாங்க முடியாதது. தயவு செய்து உதவுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.