சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், திறமையை நம்பி பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டு சூதாட்டமாகாது. ஆன்லைன் விளையாட்டுகளை பொறுத்தவரை, ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பில் கடுமையான விதிகள் சுய ஒழுங்குமுறையாக பின்பற்றப்படுகின்றன.
ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது. ஒரே செயலை ஆன்லைனில் மேற்கொள்வது சட்டவிரோதம் என்றும் நேரில் மேற்கொள்வது என்பது சட்டப்படியானது என்றும் வகைப்படுத்த முடியாது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார். மற்ற நிறுவனங்கள் தரப்பில், மொத்த தொகையில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 16 சதவீதம் மட்டுமே கட்டணமாக பெறுகின்றன. ஆன்லைன் நிறுவனங்களின் தொழில் செய்யும் உரிமையை பாதிக்கச் செய்யும் வகையில் உள்ள இந்த சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தில், வயது கட்டுப்பாடு, நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த முடியாது என்று அரசு கூற முடியாது. ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து அதை மீறினால் தடை செய்யப்படும் என்று சட்டம் இயற்றியிருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி பதில் வாதத்துக்காக வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.