காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கேவிஎம் நகர் மூன்றாம் திருவிழா மண்டபம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்பு (40). இவருக்கு, பாக்கியா என்ற மனைவியும், 4 வயதில் 1 குழந்தையும் உள்ளனர். இவர், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனமான ஆருத்ரா நிறுவனத்தில் கடன் வாங்கி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதில், ஏமாற்றமடைந்த அன்பு கடனை அடைக்க ஆன்லைன் சூதாட்டம் நோக்கி சென்றுள்ளார். அதிகளவு கடன் பிரச்னையால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான நிலையில், மன உளைச்சலுடன் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மனைவி பாக்கியாவிடம் அதிக கடன் சுமை குறித்து பேசிக்கொண்டிருந்தவர் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விஷ்ணுகாஞ்சி போலீசார், அன்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமை நிலையிலும் தொடர்ந்து நெசவுத்தொழிலை செய்துவந்த நெசவாளர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான நெசவாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தினர். இதனிடையே, கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி தனியார் நிதி நிறுவனங்கள் தொல்லையால் வீடியே பதிவு செய்து கீழ்கதீர்பூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.