சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணிப்பதற்கான குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. தமிழ்நாடு அரசிதழில் தெரிவித்திருப்பதாவது:
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியிடப்படுகிறது. அதன்படி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீனை தலைவராக கொண்டு இந்த ஆணையம் உருவாக்கப்படுகிறது.
மேலும், இந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சாரங்கன், பேராசிரியர் செல்லப்பன், உளவியலாளர் ரவீந்திரன், தனியார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி விஜய் கருணாகரன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, இந்த ஆணையம் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும், தடை சட்டத்தை செயல்படுத்தும் வகையிலும் உருவாக்கப்படுகிறது. அதன்படி, ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுகளை தடையை மீறி விளையாடுபவர்கள் மீதும், சூதாட்டத்தில் பந்தயம் கட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த சட்டத்தினை அமல்படுத்த வழிவகை செய்யும் வகையில் இந்த குழு சுதந்திரமாக செயல்படும்.