டெல்லி: ஆன்லைன் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிந்துள்ளது. ஓராண்டுக்கு முன் ரூ.17,545 கோடியாக இருந்த பைஜூஸ் ரவீந்திரனின் சொத்து மதிப்பு தற்போது பூஜ்யமாகிவிட்டது. பைஜூஸ் நிறுவனரின் சொத்து மதிப்பை ஆராய்ந்த ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவரது சொத்து பூஜ்யமாகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
2022-ம் ஆண்டில் ரூ.1,83,597 கோடியாக இருந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.8,345 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள பிளாக்காக் நிறுவனம் தான் பைஜூஸ் மதிப்பு ரூ.8,345 கோடி என மதிப்பிட்டுள்ளது. 2011-ல் தொடங்கப்பட்ட ஆன்லைன் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமான பைஜூஸ் மிகவேகமாக வளர்ச்சி அடைந்தது. உலகளவில் வியந்து பார்க்கப்பட்ட எட்டெக் நிறுவனமான பைஜூஸ் தற்போது, திவால் ஆகாமல் நிறுவனத்தைக் காப்பாற்றினால் போதும் என்ற அளவுக்குச் சென்றுள்ளது.
பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்ஜியம், எப்படி?
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டார்ட்-அப்களில் ஒன்றாக அறியப்பட்ட நிறுவனம் பைஜூஸ். இந்தியாவின் புகழ்பெற்ற எட்டெக் நிறுவனமாக விளங்கிய பைஜூஸ் கம்பெனியாக 2011ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ரவீந்திரன் என்பவரால் தொடங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பலரும் ஆன்லைனில் கல்வி பயின்றதால், பைஜூஸ் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது. இதன்காரணமாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம்பித்தார் அதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன். அன்று கோடிகளில் புரண்ட பைஜூஸ் நிறுவனம் கொரோனா காலம் முடிந்த பின்னர் மெல்ல மெல்ல சிக்கலை சந்திக்க தொடங்கியது.
குறிப்பாக கடந்த 2022ம் ஆண்டு முதல் பல்வேறு சிக்கல்களில் சிக்க ஆரம்பித்தது. குறிப்பாக கணக்கு முறைகேடுகள், தவறாக நிர்வாக அணுகுமுறை, பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் என பெரிய சிக்கல்களை சந்தித்தது. ஒரு பக்கம் ஆன்லைனில் கல்வி கற்போரின் எண்ணிக்கை சரிவு, மறுபக்கம் மூலதன செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பைஜூஸ் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது ஒருபுறம் எனில் அதன் முதலீட்டாளர் குழு உறுப்பினர்களும், ரவீந்திரனுடனான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி கடந்த பிப்ரவரி மாதம் வெளியேறிவிட்டனர்.
இதனால் பைஜூஸ் நிறுவனம் ஒரே போன் காலில் பலரை வீட்டுக்கு அனுப்ப தொடங்கிவிட்டது. பைஜூஸ் ஊழியர்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளனர். அண்மையில் வாடகை கூட செலுத்த முடியாமல் பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்தது. இந்த சூழலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக இருந்தது. இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக சரிந்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பைஜூஸ், மீண்டும் தனது ஊழியர்களின் சம்பளத்தை அளிக்காமல் தாமதமாக செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.