திருமலை: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் தெள்ளாப்பூரை சேர்ந்தவர் மல்லாரெட்டி(55), தொழிலதிபர். இவரது மனைவி ராதிகா(50). மகன்கள் சந்தீப்(28), கார்த்திக்(26). சந்தீப் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவருக்கு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. கார்த்திக் பிடெக் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்காத நிலையில் மதுபோதைக்கு அடிமையானார். மல்லாரெட்டிக்கு ரூ.100 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே மதுபோதையில் தினசரி வீடு திரும்பும் கார்த்திக், தனது பெற்றோரிடம் சொத்து பிரித்து தரும்படி கேட்டு ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். சொத்துக்களை பிரித்து தராவிட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிடுவேன் என அடிக்கடி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கை பெங்களூருவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் வீடு திரும்பினார்.
ஆனாலும் மதுபழக்கத்தை அவர் கைவிடவில்லை. இந்நிலையில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு மது போதையில் வீடு திரும்பிய அவர், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த தனது பெற்றோரை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது திடுக்கிட்டு எழுந்த மல்லாரெட்டி எழுந்து கூச்சலிட்டபடி ஓடிவிட தாய் ராதிகாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு மாடி அறையில் இருந்த சந்தீப், அவரது மனைவி ஓடிவந்தனர்.
அவர்களையும் கத்தியால் குத்த கார்த்திக் முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரும் அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதால் தப்பினர். பின்னர், கார்த்திக் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கொல்லூரு போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த ராதிகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தலைமறைவாக இருந்த கார்த்திக்கை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்து கைது செய்து விசாரித்தனர். இதில் சொத்துக்களை பிரித்து தர மறுத்த குடும்பத்தினரை தீர்த்துக்கட்ட கார்த்திக் திட்டமிட்டதும், இதற்காக அவர் ஆன்லைனில் கத்தியை சில நாட்களுக்கு முன்பு ஆர்டர் செய்து வாங்கியதும் தெரியவந்தது.