புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை அருகே உள்ள பூவரசங்குடி, பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி ஸ்ரீகா (24), இரண்டரை வயது மகள் தன்ஷிகா. கடந்த 8 மாதங்களாக சரத்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை ஸ்ரீகா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வாசல்படியில் கைக்குழந்தை தன்ஷிகா இறந்த நிலையில் கிடந்தாள். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வல்லத்திராக்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகா, கைப்பேசி வழியாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு ரூ.70 ஆயிரம் பறிகொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், ஏற்பட்ட விரக்தியில் கைக்குழந்தையைக் கொன்று, தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டிருக்கலாம் என்றும் முதற்கட்டமாக தெரியவந்தது.