சென்னை: அசோக் நகர் 7வது அவென்யு பகுதியில் ஆன்லைன் டெலிவரி ஊழியரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் பிரபல ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரவுடி மகேஷ் என்பவருக்கும், எழுமலை என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இவர்கள் பிரச்னையை பேசி சமாதானம் செய்ய ஏழுமலை தரப்பினர், தினேஷ் நண்பரான சந்தோஷ் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தினேஷ், அசோக் நகர் 7வது அவென்யு பகுதியில் தனது நண்பர் சந்தோஷிற்காக காத்திருந்தார்.
அப்போது, ரவுடி மகேஷ் தனது நண்பர்கள் 6 பேருடன் அங்கு வந்து, ‘‘எங்கள் பிரச்னையில் நீ ஏன் தலையிடுகிறாய்,’’ எனக்கேட்டு, தினேஷை ஓடஓட விரட்டி அளிவாளால் வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு, பொதுமக்கள் திரண்டதால், ரவுடி மகேஷ் தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பினார். தகவலறிந்து வந்த அசோக் நகர் போலீசார், படுகாயமடைந்த தினேஷை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, ரவுடி மகேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.