சென்னை: ஆன்லைன் டெலிவிரி ஊழியர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, தனது மகள் வாழ்க்கையை சீரழித்ததால் தனது மகன்கள் மூலம் மருமகனை வெட்டி கொன்றதாக கைது செய்யப்பட்ட மாமியார் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் எல்ஐஜி குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கலையரசன்(23). ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியரான இவர், அசோக் நகர் புதூர் 13வது தெருவை சேர்ந்த தமிழரசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த ஓராண்டிலேயே தமிழரசிக்கும் புளியந்தோப்பு சரவணன் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு கலையரசன் தனது மனைவியுடன் வசிக்கும் 3 வயது மகனை சந்தித்து அவருக்கு உணவு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது தமிழரசி ஆண் நண்பரான புளியந்தோப்பு சரவணன் வீட்டில் இருந்து வெளியே வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தமிழரசி தனது தாய் சந்தியா(40) மற்றும் சகோதரர்கள் சக்திவேல் (20), சஞ்சய் (19) ஆகியோரிடம் கூறியுள்ளார்.
பிறகு அன்று நள்ளிரவு கலையரசனை, தமிழரசியின் சகோதரர்கள் சக்திவேல், சஞ்சய் மற்றும் அவரது நண்பர் சுனில்குமார் (20) ஆகியோர் ஓட ஓட வெட்டிக் கொன்றனர். இந்த வழக்கில் அசோக்நகர் போலீசார் தமிழரசியின் சகோரர்கள் கலையரசன், சஞ்சய், நண்பர் சக்திவேல் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த தமிழரசியை இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்து விசாரணை நடத்திய போது, தனது தாய் சந்தியா ஆலோசனைப்படியே கணவனை வெட்டிக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
அதனை தொடர்ந்து போலீசார் கடந்த 10 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த சந்தியாவை 28ம் தேதி இரவு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு: எனது மகள் தமிழரசியை ஆசை வார்த்தை கூறி கலையரசன் காதலித்து எங்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதுகுறித்து எனது மகள் என்னிடம் கூறி அழுது வந்தார்.
இதுபற்றி கடந்த ஆண்டு எனது மகன் சக்திவேல் கேட்டதற்கு அவரை அரிவாளால் கலையரசன் வெட்டினார். பிறகு எனது மகள், கலையரசனை விட்டுவிட்டு 3 வயது மகனுடன் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பிறகு எனது மகளுக்கு மறுமணம் செய்ய முடிவு செய்தோம். ஆனால் கலையரசன் அதற்கு தடையாக இருந்து வந்தார்.
ஆசையாக வளர்த்த எனது மகளை ஏமாற்றி காதல் திருமணம் செய்து தற்போது நடுத்தெருவில் விட்டுவிட்டான். இதனால் எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் ெகாண்டு கலையரசனை எனது மகன் மற்றும் உறவினர் மகன் உதவியுடன் வெட்டிக் கொன்றேன். எல்லாம் எனது மகளின் எதிர்காலத்திற்காக செய்தேன். ஆனால் எனது மகளையும் போலீசார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு சந்தியா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.